பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பெற்ற சன்மானங்கள்

439

உண்டாயிற்று. “என் தந்தையாருக்கு யாதோர் ஆக்ஷேபமும் இராது” என்று நான் தேசிகரிடம் தெரிவித்தேன்.

ஆனால், இவ்விஷயத்தை என் பிதாவிடம் சொன்னபோது அவர் சிறிது கலங்கினார். அப்போதுதான் புதியதாக மதுரைக்குப் புகை வண்டி செல்லத் தொடங்கியது. பிரயாணத்தின் போது நானும் என்னைப் போன்றவர்களும் புகை வண்டியில் பிரயாணம் செய்ய நேரும். என் தந்தையார் அதில் ஏறமாட்டார். அதனால் அவரையும் உடனழைத்துச் செல்வதென்பது இயலாத காரியம். இந்நிலையில் அவரைத் திருவாவடுதுறையிலே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியது அவசியமாயிற்று.

என்னைப் பிரிந்து இருப்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை. “உன்னிடம் உள்ள மரியாதை காரணமாகவே இங்குள்ளவர்கள் என்னிடமும் பிரியமாக இருக்கிறார்கள். நீ இங்கே இல்லாதபோது எனக்குத் தனி மதிப்பு என்ன இருக்கிறது?” என்று அவர் கூறினார். “அப்படியன்று. இங்கே மடத்தில் பூஜை முதலியவற்றைக் கவனிப்பதற்காகத் தக்கவர்கள் இருப்பார்கள். அவர்கள் மனிதர்களுடைய தராதரம் தெரிந்தவர்கள். நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். காறுபாறு தம்பிரான் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்” என்று சமாதானம் சொன்னேன். தேசிகரும் என் தந்தையாரை வருவித்துத் தைரிய வார்த்தைகளைக் கூறினார்.

கண்டியும் சால்வையும்

தைப்பூசத்திற்கு முதல் நாள் தேசிகர் பரிவாரங்களுடன் யாத்திரையைத் தொடங்கினார். திருவிடைமருதூரில் அப்பொழுது பிரம்மோத்ஸவம் நடந்தது. அங்கே போய்த் தைப்பூசத்தன்று திருத்தேரை நிலைக்குக்கொண்டு வரச்செய்தார். என் பிராயணத்திற்கு வேண்டிய கித்தான்பை ஒன்றையும் பட்டுத் தலையணையோடு கூடிய ஜமக்காளம் ஒன்றையும் அவர் எனக்கு அங்கே உதவினார்.

பிறகு என்னைச் சமீபத்தில் வந்து உட்காரச் செய்து, “நாம் யாத்திரை செய்யும் இடங்களிலெல்லாம் உமக்குத் தொந்தரவு கொடுக்க நேரும். தமிழபிமானிகளாகிய கனவான்கள் பலர் வருவார்கள். அவர்களுக்குத் திருப்தி உண்டாகும்படி தமிழ்ப் பாடல்களைச் சொல்ல வேண்டியது உமது கடமை” என்று கூறினார். “அப்படிச் செய்வது என் பாக்கியம்” என்றேன் நான்.

அவர் கட்டளையின்படி உடனே ஒரு தம்பிரான் கௌரீசங்கரம் வைத்த கண்டி ஒன்றைக் கொணர்ந்து என் கழுத்திலே போட்டு ஒரு