பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பதிப்பித்த முதல் புஸ்தகம்

440

கல்லிடைக் குறிச்சிக்குச் சென்றார். அவருடைய வரவை உத்தேசித்து நூதனமான கொலு மண்டபம் ஒன்று கட்டப்பெற்றிருந்தது. திருவாவடுதுறையைப் போலவே அழகிய சிவாலயமொன்று மடத்தைச் சார்ந்து விளங்கியது ஸ்வாமியின் திருநாமம் கண்வசங்கரனென்பது. ஓதுவார்கள், காரியஸ்தர்கள் முதலிய பரிகரத்தாரும் திருவாவடுதுறையைப் போலவே மிகுதியாகவும், திறமை சாலிகளாகவும் இருந்தனர். அவ்வூரில் உள்ள பெரிய அக்கிரகாரங்களில் இருந்த அந்தணர்களிற் பெரும்பாலோர் பெருஞ்செல்வர்கள். அவர்கள் யாவரும்சுப்பிரமணிய தேசிகரிடத்தில் அன்புடையவர்கள். எல்லோரும் தேசிகருடைய வரவை அறிந்து பழ வர்க்கங்களுடன் வந்து பார்த்துச் சென்றார்கள்.

எல்லாக் காட்சிகளையும் கண்டு நான் ஆச்சரியமடைந்து கொண்டே இருந்தேன். அங்கே உள்ள இயற்கைக் காட்சிகளும், மனிதர்களுடைய விசுவாசமும், வித்துவான்களுடைய பெருமையும் யாரையும் வசீகரிக்கத் தக்கவை. தேசிகர் அடிக்கடி கல்லிடைக்குறிச்சியைப் பற்றிப் பாராட்டிப் பேசுவதுண்டு. அவர் சின்னப்பட்டத்தை வகித்த காலத்திலே பல வருஷங்கள் அங்கே வசித்து வந்தார். அவர் பாராட்டியது அபிமானத்தா லெழுந்ததன்றென்பதும் அவ்விடம் அந்தப் பாராட்டுக்கு ஏற்றதேயென்பதும் எனக்கு அப்போது தெளிவாக விளங்கின.

உடன் வந்திருந்த வேணுவனலிங்கத் தம்பிரான் செவந்திபுரம் மடத்தில் சுப்பிரமணிய தேசிகர் எழுந்தருள்வதற்குரிய நல்ல நாள் ஒன்று பார்த்து வைத்திருந்தார். “தேசிகர் தம் பழைய ஸ்தானமாகிய கல்லிடைக் குறிச்சியிலேயே நெடுநாள் தங்கி விடுவாரோ” என்ற கருத்து அவருக்கு இருந்தமையால் விரைவில் செவந்திபுரத்திற்கு புறப்பட வேண்டும் என்று வற்புத்திக் கொண்டே இருந்தார். கல்லிடைக் குறிச்சியிலே எவ்வளவு காலம் இருந்தாலும் மிகவும் சௌக்கியமாக இருக்கலாமென்பது எனக்குத் தெரியும். ஆனாலும் புதிய புதிய காட்சிகளைப் பார்க்க வேண்டுமென்றே ஆசையால் “தேசிகர் விரைவில் புறப்பட வேண்டும்” என்று நானும் எண்ணினேன்.

செவந்திபுரம்

குறிப்பிட்ட நல்ல தினத்தில் தேசிகர் செவந்திபுரம் சென்று மடத்தில் தங்கினார். பாண்டி நாட்டை ஆண்டு வந்த நாயக்க மன்னர்களின் அதிகாரியாகிய செவந்தியப்ப நாயக்கரென்பவரால் மடத்திற்கு விடப்பட்ட கிராமங்கள் எட்டுள் முக்கியமானது செவந்தி-

என்-20