பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்தல தரிசனம்

457

அன்று மாலை சர்க்கரை பாரதியார் மடத்திற்கு வந்து தேசிகரைப் பார்த்தார். அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு நாங்கள்

அவர் நிலையை அறிந்து இரங்கினோம். அவர் ஒரு ஜமீன்தாரோடு சில மாதம் இருந்தார். அந்த ஜமீன்தார் தம் மாளிகையினுள்ளே தமக்கு மிகவும் வேண்டிய ஒருவரோடு சீட்டாடிக் கொண்டிருந்தாராம். பாரதியார் அவர் காதில் படும்படி வெளியிலிருந்தபடியே பாடினாராம். உள்ளே ஜமீன்தாரோடு சீட்டாடினவர் ஒரு பெண் பாலாதலின் பாரதியார் உள்ளே போகக் கூடாதாம். பாட்டை நிறுத்தியது தெரிந்து ஜமீன்தார் அதட்டின குரலைத்தான் நாங்கள் கேட்டோம்.

இவ்விஷயங்களைக் கேட்டு நாங்கள் வருந்தினோம். “வெறும் சோற்றுக்குத்தான் இப்படித் தாளம் போட வேண்டியிருக்கிறது” என்று அவர் சொன்னார். பிறகு அவர் சுப்பிரமணிய தேசிகருடன் பேசி இன்புற்றார். பல அரிய பாடல்களையும் கீர்த்தனங்களையும் பாடினார். இயலும் இசையும் அவரிடம் இசைந்திருந்தன. அவ்விரண்டிலும் விருப்பமுள்ள தேசிகர் கேட்டுப் பேருவகை அடைந்தார். அந்த வித்துவானுக்கு பதினைந்து ரூபாய் பெறுமான சரிகை வஸ்திர மொன்றை அளித்தார்.

பாரதியார் அவ்வளவு சம்மானத்தை எதிர்பார்க்கவே இல்லை. “இந்த மாதிரி தாதாக்களும் சம்மானமும் கிடைத்தால் என் ஆயுள் முழுவதும் அடிமையாக இருப்பேனே!” என்று அவர் கூறினார். “நீங்கள் எப்போது வந்தாலும் நமக்கு ஸந்தோஷமே, திருவாவடுதுறைக்கும் வாருங்கள்” என்று தேசிகர் சொன்னார்.

“அருமை தெரியாத முரடர்களுடன் பழகும் எனக்கு அதிருஷ்டம் இருக்கவேண்டுமே! இருந்தால் அவசியம் வருவேன்” என்று கண் கலங்கியபடியே சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.

அத்தியாயம்—76

ஸ்தல தரிசனம்

திருக்குற்றாலத்தில் சில தினங்கள் தங்கிப் பிறகு ஆ தீனத்திற்குரிய கிராமங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே சுப்பிரமணிய தேசிகர் யாத்திரை செய்யலானார். வேணுவன லிங்கத் தம்பிரான் ஆட்சியின் கீழிருந்த அந்தக் கிராமங்கள் திருவாவடுதுறை மடத்தின் ஜீவாதாரமாக உள்ளவை. அவற்றில் கம்பனேரி புதுக்குடி என்பது