பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்தல தரிசனம்

459

திருவிழா நடைபெறும். அத்திருவிழாவைத்தான் ‘ஆடித் தவசு’ உத்ஸவமென்று வழங்குகிறார்கள்.

கரிவலம் வந்த நல்லூர்

சங்கரநயினார் கோயிலில் ஒரு வாரம் இருந்து விட்டுத் திருச்செந்தூர் ஆவணி உத்ஸவ தரிசனத்துக்காகப் புறப்பட்டோம். இடையே ஒரு நாள் கரிவலம் வந்த நல்லூரில் தங்கினோம். தமிழ்ப் பயிற்சியைத் தொடங்கும் மாணாக்கர்களுக்கு அந்த ஸ்தலத்தைப் பற்றித் தெரியாமலிராது. வரதுங்கராம பாண்டியர் இயற்றிய கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவைக் கலித்துறை யந்தாதி, வெண்பா அந்தாதி என்ற மூன்று பிரபந்தங்களும் அத்தலத்தைப் பற்றியனவே யாகும். கரிவலம் வந்த நல்லூர் என்பதன் மரூஉவே கருவை என்பது.

அந்த ஸ்தலத்தை அணுகியவுடன் நான் முன்னே கேட்டிருந்த அந்தாதிச் செய்யுட்களெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியரிடம் அவ்வந்தாதி நூல்களைப் படித்த காலத்தில் அவர் கூறிய அர்த்தத்தைக் காதாற் கேட்டிருந்தேன். ஸ்தல சம்பந்தமாக அவர் சொன்ன விஷயங்களைக் கொண்டு அப்போது நான் மனத்திலே ஒரு கோயிலைக் கற்பனை செய்திருந்தேன். கண் முன்னே பின்பு அவ்வாலயத்தைக் கண்டபோது அதுவரையில் விளங்காத விஷயங்கள் விளங்கின. பாடல்களின் அர்த்தத்தைக் காதாற் கேட்டபோது அப்பொருள் குறைவாகவே இருந்தது; பால்வண்ண நாதரைக் கண்ணால் தரிசித்த போதுதான் அப்பொருள் நிறைவெய்தியது. ஸ்வாமிக்கு நிழல் அளித்து நிற்கும் பழைய களாச் செடியையும் பார்த்து விம்மித மடைந்தேன்.

சிறந்த தமிழ்ப் புலவரும் அரசரும் அடியாருமாகிய வரதுங்க ராம பாண்டியர் வாழ்ந்த நகரமாதலின் அதனைச் சுற்றிப் பார்க்கலாமென்று சில நண்பர்களுடன் புறப்பட்டேன். அவ்வரசர் வசித்த இடத்தைப் பார்த்து இன்புற்றேன். இப்படி ஊரைப் பார்த்துக் கொண்டு சென்ற போது நடு வீதியில் என் எதிரே ஒருவர் வந்தார். அவருடன் சில குட்டித் தம்பிரான்களும் வந்தார்கள். வந்தவர் என்னைக் கண்டு அஞ்சலி செய்தார். எனக்கு அவர் இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை.

அவர் தலையில் ஓர் அழகிய உருமாலை கட்டியிருந்தார். காதிற் கடுக்கனும் கையில் மோதிரமும் அணிந்திருந்தார். இடுப்பில் சரிகை வஸ்திரம் உடுத்திருந்தார். இவற்றையெல்லாம் பார்த்து, “இந்தப் பிரபுவை நாம் பார்த்ததாகக் தெரியவில்லையே” என்று