பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறை நிவர்த்தி

469

[மிக்க தலையையுடைய ஆதிசேஷனாக இருப்பினும் உன் முன்னால் ஐந்து தலையுடையவனாகிக் குறைவடைவான் என்றும், மேன்மையை உடைய ஆதிசேஷனும் நின் முன்னால் பயத்தை யுடையவனாவான் என்றும் முன் இரண்டடிகளுக்கு இரண்டு பொருள்கள் தோற்றின. விஞ்சுதல் - மிகுதல்.]

அவ்வளவு விரைவில் சிலேடை நயம் தோற்றும்படி அவர் சொன்ன பாடல் எங்களைப் பிரமிக்கச் செய்து விட்டது.

ஒரு கனவான்

தேசிகரைப் பார்க்கவரும் கனவான்களிற் பெரும்பாலோர் தமிழ்க் கல்வி யறிவுடையவர்களாகவே இருப்பார்கள். தேசிகர் முன்னிலையில் எப்போதும் தமிழ் முழக்கம் விடாமல் இருப்பதை அறிந்த சிலர் அவர் திருவுள்ளக் குறிப்பை அறிந்து மாணாக்கர்களைப் பாடல்கள் சொல்லும்படி கேட்பதும் அவர்களை வினாவிப் பரீட்சை செய்வதும் உண்டு. கோட்டூரிலிருந்த பெருஞ் செல்வராகிய ரங்கசாமி முதலியாரென்னும் கனவான் தம் குடும்பத்தோடும், உறவினர்களோடும் ஸேதுஸ்நானத்திற்குச் சென்று திரும்புகையில் திருப் பெருந்துறைக்கு வந்து தேசிகரைத் தரிசித்துக் கொண்டார். அவர் நல்ல தமிழ்ப் பயிற்சியுடையவர். அவருடன் வந்திருந்த வேறொரு கனவான் பல தமிழ் நூல்களில் சிறந்த பயிற்சியுடையவராகத் தோன்றினார். கம்பராமாயணத்தில் நல்ல பழக்கம் அவருக்கு இருந்தது. அவர்கள் தேசிகருடன் பேசிக்கொண்டிருந்தபோது தேசிகர் மாணாக்கர்களை அழைத்து அவர்களுக்குப் பழக்கம் செய்வித்தார். அக்கனவான் கம்ப ராமாயணத்தில் எங்களைச் சில கேள்விகள் கேட்டார். அக்கேள்விகளிலிருந்தே அவருடைய கல்வியறிவு புலப் பட்டது. பெரும்பாலும் என்னையே வினாவினார். நான் திருப்தியாக விடையளித்தேன்.

புராண பாடம்

காஞ்சிப் புராணத்தை ஒருமுறை பாடங் கேட்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. பிள்ளையவர்கள் காலத்தில் புஸ்தகம் கிடைக்காமையால் அதை நான் படிக்க முடியவில்லை. அது குறையாகவே இருந்தது. அந்நூலின் முதற் காண்டம் ஸ்ரீ சிவஞான முனிவராலும் இரண்டாங் காண்டம் ஸ்ரீ கச்சியப்ப முனிவராலும் இயற்றப் பெற்றவை. என் விருப்பத்தைச் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தபோது அவர் ஏட்டுப் புஸ்தகத்தை வருவித்து அளித்துச் சின்னப்பண்டார ஸந்நிதியாகிய ஸ்ரீ நமசிவாய தேசிகரிடத்திற் பாடங் கேட்கலாமென்று சொன்னார். அப்படியே கேட்கத் தொடங்கினேன்.