பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறை நிவர்த்தி

471

யினர். என் தாய் தந்தையரைத் திருவாவடுதுறைக்கு முன்னதாக அனுப்பிவிட்டு நான் மாத்திரம் தேசிகருடன் இருந்தேன். திரும்புகையில் திருப்பனந்தாளுக்கு எழுந்தருள வேண்டும் என்று இராமலிங்கத் தம்பிரான் விண்ணப்பித்துக் கொண்டமையால் தேசிகர் அவர் விருப்பத்துக்கிணங்கித் திருப் பெருந்துறையிலிருந்து பரிவாரங்களுடன் புறப்பட்டு வழியே உள்ள பல ஊர்களிலும் அடியார்கள் செய்யும் உபசாரத்தைப் பெற்றுக் கும்பகோணத்தின் வழியாகத் திருப்பனந்தாளை அடைந்தார்.

சுப்பிரமணிய தேசிகர் வரவையறிந்து சாலையின் இருபுறங்களிலும் பல மைல் தூரத்திற்கு வாழை மரங்களும் தோரணங்களும் கட்டி இராமலிங்கத் தம்பிரான் அலங்காரம் செய்திருந்தார். திருப்பனந்தாள் மடத்திற்குள் ஒரு பெரிய பங்களாவை மூங்கிலால் அமைத்தார். அதைப் பார்த்தபோது கற் கட்டிடம் போலவே தோற்றியது.

சுப்பிரமணிய தேசிகர் அங்கே தங்கினார். ஸ்ரீ இராமலிங்கத் தம்பிரான் செய்த உபசாரம் இன்னபடியிருந்தது என்று சொல்வதற்கரியது. பாட்டுக் கச்சேரிகள் நடைபெற்றன. பல தமிழ் வடமொழி வித்துவான்கள் வந்து சுப்பிரமணிய தேசிகர் அங்கே எழுந்தருளிய சிறப்பைப் பாராட்டிப் பாடினார்கள். நானும் வேறு மாணாக்கர்களும் தேசிகரையும் இராமலிங்கத் தம்பிரானையும் புகழ்ந்து பல பாடல்கள் இயற்றினோம். எல்லாம் ‘பல புலவர் செய்யுட் டிரட்டு’ என்ற பெயரோடு சேர்க்கப் பெற்று ஒரு புஸ்தக வடிவமாக அக்காலத்தில் அச்சிடப்பெற்றன

திருவாவடுதுறை திரும்பியது

திருவாவடுதுறை ஆலய உத்ஸவமும் குருபூஜையும் சமீபித்தமையால் தேசிகர் பல நாட்கள் திருப்பனந்தாளில் தங்க முடியவில்லை. சில நாளிருந்து பிறகு புறப்பட்டுத் துறைசையை அடைந்தார். குரு பூஜை முதலியன சிறப்பாக நடைபெற்றன. தேசிகர் யாத்திரையினால் நேர்ந்த சிரமத்தை ஆற்றிக் கொண்டும் வழக்கமாக நடை பெறுவனவற்றைக் கவனித்தும் வந்தார். யாத்திரையினிடையே அங்கங்கே சந்தித்துப் பழகிய பல கனவான்களுக்குக் கடிதங்கள் எழுதச் செய்தார். இடையிடையே மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதும் உண்டு.

பாடம் கேட்டல்

ஒய்ந்த நேரங்களில் நமசிவாய தேசிகரிடம் நான் தமிழ்நூல்களைப் பாடம் கேட்டு வரலானேன். மாணாக்கர்கள் பலருக்குப்பாடமும் சொல்லி வந்தேன். நமசிவாய தேசிகர் சிறிதும் ஓய்வின்றிப்