பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிவமயம்

முகவுரை

திருத்தாண்டகம்

"திருவேயென் செல்வமே தேனே வானோர்
  செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்க
உருவேயென் னுறவேயென் னூனே ஊனி
  னுள்ளமே யுள்ளத்தினுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
  சுருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினை நோயடையா வண்ணம்
  ஆவடுதண் டுறையுறையு மமரரேறே"

சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு தமிழன்பர் பலர் பாராட்டி வரும்போது எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை அடிக்கடி நினைந்து, தம்மிடம் வருவோர்களிடம் பிள்ளையவர்களுடைய கல்விப் பெருமை, போதனாசக்தி, செய்யுளியற்றுவதில் இருந்த ஒப்புயர்வற்ற திறமை முதலியவற்றைக் கூறித் தமக்கு ஏற்பட்டு வரும் பெருமைக்கெல்லாம் அவர்களிடம் முறையாகப் பல வருடம் பாடங்கேட்டு இடைவிடாது பழகியதே காரணம் என்று சொல்லுவார்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் தாம் தெரிந்து கொண்ட சில அரிய செய்திகளைச் சொல்லுவார். கேட்பவர்கள் திருப்தியுற்றுச் செல்லுவார்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு வெளிவந்தால் தமிழ் நாட்டினர் அறிந்து இன்புறுவதற்கு அனுகூலமாயிருக்குமென்று தந்தையார் எண்ணினர். கும்பகோணத்தில் இரண்டு முறை பெரியசபை கூட்டி, காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த ஸ்ரீ J. M. ஹென்ஸ்மான் முதலியவர்கள் அக்கிராசனத்தின் கீழ், ஸ்ரீ பிள்ளையவர்களைப் பற்றி அவர்கள் உபந்நியாசம் செய்தார்கள். கேட்ட அன்பர்கள் பலர் பிள்ளையவர்களுடைய பெருமையை வரவர அதிகமாகப் பாராட்டினார்கள். அதுமுதல் எந்தையாருக்குத் தம் ஆசிரியர் அவர்களுடைய சரித்திரத்தை விரிவாக எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டுமென்ற வேகம் உண்டாயிற்று. குடந்தையிலிருந்து