பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

478

என் சரித்திரம்

தேசிகரிடம் சொல்லிக்காட்ட வேண்டுமென்று எனக்கு ஒரு செய்யுளால் அறிவித்து அவற்றையும் அனுப்பியிருந்தார். தேசிகரிடம் நான் அச்செய்யுட்களை அறிவித்ததோடு அச் செய்தியைப் பின்வரும் பாடலால் வேதநாயகம் பிள்ளைக்கும் தெரிவித்தேன்:-

“தாயக மெனநன் னாவலர் பலர்க்குந்
     தனமுதல் அளித்தியல் வேத
நாயக மகிபா நீயக மகிழ்ந்து
     நன்கனுப் பியமுதற் பாவை
ஆயக மதில்வாழ் சுப்பிர மணிய
     ஆரியன் பாலுட னுரைத்தேன்
நோயக லெவர்க்கு நின்பெருஞ் சீரை
      நுவன்றன னுவலரும் புகழோய்.”

(முதற்பா - வெண்பா. ஆய் அகமதில் வாழ் - நூலை ஆராய்கின்ற நெஞ்சத்தில் வாழும்.)

இவ்விதம் பல வகையிலும் பாடும் பணியில் ஈடுபட்ட என் செய்யுள் முயற்சி விருத்தியாகி வந்தது. அதனால் மற்றவர்களுக்கு ஸந்தோஷமும் எனக்கு மேன்மேலும் ஊக்கமும் விளைந்தன. சுப்பிரமணிய தேசிகர், “பிள்ளையவர்களுடைய போக்கை நன்றாகக் கற்றுக் கொண்டிருக்கிறீர். உம்முடைய செய்யுட்கள் அவர்களுடைய ஞாபகத்தை உண்டாக்குகின்றன” என்று அடிக்கடி சொல்வார். பிள்ளையவர்கள் இட்ட பிச்சையே எனது தமிழறிவு என்ற நினைவிலேயே வாழ்ந்து வந்த எனது உள்ளத்தை அவ்வார்த்தைகள் மிகவும் குளிர்விக்கும்.

அத்தியாயம்—80

புதிய வாழ்வு

1880-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12௳ வியாழக்கிழமை பொழுது விடிந்தது. அன்று காலையில் நான் வழக்கம்போலவே உத்ஸாகத்தோடு இருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பு என்னை நல்ல நிலைமையில் வைத்து வளர்த்து வரும் என்ற எண்ணம் எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் இருந்தது. என் வாழ்வில் ஒரு விதமான அமைதி ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதினேன். பிள்ளையவர்களுடைய பதவியை வகிக்கும் தகுதி என்னிடம் இராவிட்டாலும் அவரது மாணாக்க பரம்பரையை விருத்தி செய்யும் தொண்டே எனது வாழ்க்கைப் பணியாக இருக்குமென்று எதிர் பார்த்தேன்.