பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரியா விடை

487

நல்ல வேளை

அப்பால் மூன்று மணிக்கு ஜோஸ்யரை வருவித்து நாள் பார்க்கச் சொன்னதில் அவர், “இன்று ராத்திரி எட்டு மணிக்கே நல்ல வேளையாக இருக்கிறது; அப்பொழுது அனுப்பலாம்” என்று சொன்னார். உடனே தேசிகர் எனக்குச் சொல்லியனுப்பி வருவித்து, “இன்று ராத்திரி உம்மை அனுப்புவதாக இருக்கிறோம். ஸித்தமாக இருக்க வேண்டும்” என்று கூறினார். எனக்கு மனம் மிகவும் கலங்கியது. அவ்வளவு சீக்கிரத்தில் பிரிய வேண்டியிருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. வியாழக்கிழமையன்று இந்தப் பிரஸ்தாவம் ஆரம்பமானதிலிருந்து இதன் சம்பந்தமாக நடந்து வந்த ஏற்பாடுகள் தெய்வ சங்கற்பம் எதை நடத்துகிறதோ அது மிக வேகமாக நடைபெறுமென்பதையும் மற்ற நிகழ்ச்சிகளெல்லாம் அதனைச் சார்ந்து அனுகூலம் விளைவிக்குமென்பதையும் உணர்த்தின.

“இன்றைக்கு ராத்திரியேயா புறப்பட வேண்டும்?” என்று நான் மெல்லத் தழுதழுத்த குரலுடன் கேட்டேன்.

“ஆமாம், ஜோஸ்யரைக் கொண்டு நாள் பார்த்ததில் ராத்திரி எட்டு மணிக்கு மேல் புறப்படுவது மிகவும் நல்லதென்று சொன்னார். நல்ல காரியத்தை விரைவிலே நிறைவேற்றுவதுதான் சிறந்தது” என்றார் தேசிகர்.

எனக்குப் பேச நா எழவில்லை. வீட்டுக்குப் போய்ப் பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினேன். ஏற்பாடு என்ன செய்யப் போகிறேன்! எதைக் கொண்டு போவது, எதை விட்டுப் போவது என்று விளங்கவில்லை. ஏதோ கைக்கு அகப்பட்ட ஆடைகளையும் புஸ்தகங்களையும் எடுத்துகொண்டேன்.

தேசிகர் விடை தருதல்

மாலையில் சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து என்னை வரும்படி சொல்லியனுப்பினார். போனேன். “சரியான காலத்தில் நீர் புறப்பட வேண்டும்” என்று அவர் சொல்லி ஒரு மகமல் சட்டை, ஒரு தலைக்குட்டை, ஒரு சின்னச் சட்டை, சரிகை போட்ட பெரிய வெள்ளைத் துப்பட்டா, உயர்ந்த சால்வை ஒன்று ஆகியவற்றை அளித்து, “எல்லாவற்றையும் உபயோகித்துக் கொள்ளும்” என்று அன்பு ததும்பச் சொன்னார். பிறகு, கருங்காலிப் பெரிய கைப்பெட்டி ஒன்று, கை மேஜை ஒன்று, ஒரு சிறிய கைப் பெட்டி, கொழும்பிலிருந்த அடியார் ஒருவர் கொண்டு வந்து கொடுத்-