பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோதனையில்‌ வெற்றி

489

அதைப் பிரிய மனம் வரவில்லை. வேறு எங்கே அத்தகைய இடம் கிடைக்கப் போகிறது! மேலே நடந்தேன். அங்கங்கே உள்ள தீபஸ்தம்பங்களைப் பார்த்தேன். அவற்றின் அடியில் அமைதியாக அமர்ந்து எவ்வளவு தினங்கள் படித்திருக்கிறேன்! கவலை ஒன்றும் இல்லாமல் புஸ்தகத்திலே கண்ணும் கருத்துமாக ஒன்றிப்போய் வாசிக்க உதவிய அவற்றை விட்டுச் செல்லப் போகிறேனென்ற நினைப்போடு துக்கமும் கலந்து வந்தது. கொலு மண்டபத்துக்கு வந்தேன். அங்கே சகபாடிகளுடன் படித்த இடங்களைப் பார்த்து மனங் குழம்பி நின்றேன். பல இரவுகள் அந்த இடத்தில் கணக்குச் சுருணைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு மெய்ம்மறந்து தூங்கியிருக்கிறேன். அந்தச் சுருணைகளைப் பார்த்தேன். அங்கே உள்ள ஒவ்வொரு பொருளும் உயிர்கொண்டு என்னிடம் பேசுவது போல் இருந்தது. அவற்றினிடம் நான் விடை பெற்றேன். “அவை ஜடப் பொருள்களல்லவா? அவற்றின் மேல் அவ்வளவு பற்றிருப்பது பைத்தியகாரத் தனமல்லவா?” என்று பிறருக்குத் தோற்றும். எனக்கு உலகமெல்லாம் திருவாவடுதுறை மடத்திலே இருந்தது. அங்குள்ள பொருள்களைப் பிரியும்போது உலகத்தையே பிரிவது போன்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்பட்டது.

புறப்பாடு

வழியில் கண்ட அன்பர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். ஆகாரம் செய்து கொண்டு மடத்திலிருந்து வந்த வண்டியிலேறி நரசிங்கம் பேட்டை ரெயில் நிலயத்துக்கு வந்தேன். எனக்குத் துணையாக என் அம்மான் பிள்ளை கணபதி ஐயரென்பவரை என் தந்தையார் அனுப்பினார். என்னை வழியனுப்பத் தம்பிரான்களும் நண்பர்களும் மாணாக்கர்களும் வந்தார்கள். அவர்கள் பிரிவாற்றாமையால் வருந்தினார்கள், நான் கண்ணீர் துளும்ப எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டேன்.

புகைவண்டி வந்தது. ஏறிக்கொண்டு கும்பகோணம் சேர்ந்தேன்.

அத்தியாயம்—82

சோதனையில் வெற்றி

குபகோணம் ஸ்டேஷனில் இறங்கி இரவு பத்துமணிக்கு நான் நேரே தியாகராச செட்டியார் வீட்டை அடைந்தேன். மாணாக்கர்களிடம் பேசிக்கொண்டிருந்த செட்டியார் அப்போதுதான் அவர்களுக்கு விடையளித்து விட்டு ஆகாரத்துக்குச் செல்ல எழுந்தார். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் என்னை எதிர்பார்க்கவில்லை.