பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502

என்‌ சரித்திரம்‌

ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்து வந்தார். எல்லோருடைய முகத்திலும் திருப்தியின் அடையாளம் இருந்ததை அவர் உணர்ந்து தாமும் திருப்தியுற்றார். இவ்வாறு இருந்த சமயத்தில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ரங்காசாரியார் எழுந்து ஆட்சேபித்தார். நான் சமாதானம் சொல்லத் தொடங்குகையில் செட்டியார் எழுந்து மிக விரைந்து அவரிடம் சென்று அஞ்சலி செய்து, “ஸ்வாமிகள் இந்த ஸமயம் ஒன்றும் திருவாய் மலர்ந்தருளக் கூடாது. இவர் பிள்ளைகளுக்குப் பொருள் விளங்கச் சொல்லுகிறாரா என்பதை மட்டும் கவனித்தாற் போதும். ஆட்சேபம் பண்ணக்கூடிய சமயம் அல்ல இது. இவரோ சிறு பிள்ளை. நீங்களோ பிராயம் முதிர்ந்தவர்கள். ஸம்ஸ்கிருத பாரங்கதர். ஏதேனும் தவறிவிட்டால் என்னுடைய இஷ்டம் பூர்த்தியாகாது. க்ஷமித்தருளவேண்டும்” என்று சொல்லி மீண்டும் தம் இடத்தில் போய் அமர்ந்தார். மற்ற இடங்களில் செட்டியார் தைரியமாகப் பேசிப்பிறரை அடக்குவதைக் கண்டிருந்த நான் அப்போது காலேஜிலும் அப்படிச் செய்வதில் அவர் பின் வாங்கார் என்பதை உணர்ந்தேன்.

மேலே பாடம் நடந்தது. “வைகுந்தத்திற்குச் சென்ற வித்தியாதரப் பெண்மணி ஒருத்தி திருமகளைத் தோத்திரம் செய்து பாட அத்தேவி மகிழ்ந்து ஒரு மாலையைக் கொடுக்க அதனை வாங்கி அந்தப் பெண்மணி தன் யாழிற்குச் சூட்டினாள்” என்ற செய்தி அகலிகைப் படலத்தில் வருகிறது.

“அன்ன மாலையை யாழிடைப் பிணித்து”

என்று ஒரு பாடல் தொடங்குகிறது. அதற்கு நான் அர்த்தம் சொல்லும்போது இடையே செட்டியார், “இந்தக் காலத்துப் பிள்ளைகளானால் பக்கத்திலுள்ள தங்கள் நாயின் கழுத்தில் அதை மாட்டுவார்கள்” என்றார். யாவரும் கொல்லென்று சிரித்தனர்.

பிற்பகல் நிகழ்ச்சிகள்

அந்த மணி முடிந்தது. இடை நேரத்திலே ஆகாரம் செய்து விட்டு வந்தேன். பிற்பகலில், எப். ஏ. முதல் வகுப்புக்குச் சென்றோம். அங்கே 80 பிள்ளைகளுக்கு மேல் இருந்தார்கள். நன்னூல் எழுத்தியல் ஆரம்பமாயிற்று. முதல் சூத்திரத்தை நான் சொல்லிவிட்டு, “மேலே சில சூத்திரங்களை நீங்களே சொல்லி அந்த முறையை எனக்குக் கற்பிக்க வேண்டும்” என்று செட்டியாரை வேண்டிக் கொண்டேன். அவர் அப்படியே சொல்லிக் கேள்விகளும் கேட்டார். எனக்குப் பல விஷயங்கள் அப்போது தெரிந்தன.