பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504

என்‌ சரித்திரம்‌

செட்டியார் அன்று மூன்று மணிக்கு மேல் வந்து நான் பாடம் சொல்லுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு மேல், ஸ்ரீநிவாசையர் செட்டியாரிடம் வந்து, “இன்று நான்கு மணிக்கு மேல் தமிழ்ப் பாடம் எந்த வகுப்பிற்கு என்று ராயர் கேட்டார். அந்த வகுப்பிற்கு அவர் ஒரு வேளை வரலாம். ஜாக்கிரதையாகப் பாடம் சொல்லச் சொல்லுங்கள்” என்று கூறிச் சென்றார். வகுப்பு விட்டவுடன் செட்டியார் என்னிடம் இதைச் சென்னதன்றி “ராயரைக் கண்டு பயந்து ஏதாவது உளறி விடாமல் ஜாக்கிரதையாகச் சொல்லுங்கள். நாங்களெல்லாம் திருப்தி அடைவது முக்கியமன்று. அவருடைய திருப்திதான் முக்கியம். அவருக்கு நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்தார்.

கோபால ராவ் வரவு

பி. ஏ. இரண்டாவது வகுப்புக்குள் நான் சென்றேன். செட்டியாரும் உடன் வந்தார். அங்கே நன்னூல் பாடம் நடத்தத் தொடங்கினேன். பெயரியலில், “ஒன்றே யிருதியிணைத் தன்பாலேற்கும்” என்னும் சூத்திரத்தைச் சொல்லி வந்தேன். அப்பொழுது ஒரு சேவகன் நாற்காலி ஒன்றை எடுத்து வந்து என் பக்கத்தில் போட்டான். அடுத்த நிமிஷம் கோபால ராவ் வந்தார். உடனே எழுந்து அஞ்சலி செய்தேன். “நீங்கள் சும்மா இருந்து பாடத்தை நடத்துங்கள்” என்று சொல்லி விட்டு அவர் அந்த நாற்காலியில் அமர்ந்தார். நான் சூத்திரத்திற்கு உரையும் உதாரணங்களும் சொல்லி விட்டுக் கேள்விகள் கேட்டேன். ராயர் ஒரு மாணாக்கரிடமிருந்து ஒரு நன்னூல் புஸ்தகத்தை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு கவனித்து வந்தார்.

அவர் அங்கே இருந்ததில் எனக்குச் சிறிதும் அதைரியம் ஏற்படவில்லை. ஊக்கத்துடனே சொல்லி வந்தேன். அவர் நன்னூலை நன்றாகக் கற்றவரென்பதைத் தியாகராச செட்டியார் என்னிடம் முன்பே சொல்லியிருந்தார். அதனால் எனக்குப் பின்னும் தைரியமே பிறந்தது. நன்னூலை இளமை தொடங்கியே நான் படித்துப் பல வகையாக ஆராய்ந்து சிந்தித்து ஒழுங்கு படுத்தி ஞாபகத்தில் வைத்திருந்ததால் அதனைப் பாடம் சொல்லுவது எனக்கு மிகவும் சாதாரணமாக இருந்தது. நான் முன்னும் பின்னுமுள்ள செய்திகளோடு இயைத்து விஷயங்களை விளக்கினேன். நூல் முற்றும் படித்த ராயர் அவற்றிலிருந்து என் பயிற்சியை உணர்ந்து திருப்தியடையக் கூடும் என்ற நம்பிக்கையோடு நான் பாடம் சொன்னேன்.

மற்றச் சமயங்களில் இடையே ஏதாவது சொல்லியும் கேள்வி கேட்டும் வந்த செட்டியார் அப்பொழுது ஒன்றும் பேசாமல் எல்லா-