பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன பிரயோசனம்‌

529

நூதனமாக உத்தியோகஸ்தர்கள் வந்தால் அவர்களிடம் மனிதர்களை அனுப்பிப் பார்த்து வரச் செய்வதும், குரு பூஜை முதலிய விசேஷதினங்களில் மடத்திற்கு வரவேண்டுமென்று அழைக்கச் செய்வதும் திருவாவடுதுறை மடத்து வழக்கங்கள். சேலம் இராமசுவாமி முதலியாருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் கேள்வியுற்ற ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் அவரைப் பார்த்து வரும்படி காறுபாறு தம்பிரானையும் அவருடன் வேறு சிலரையும் அனுப்பினார். தம்பிரான் பரிவாரங்களுடன் சென்று முதலியாரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார்.

இராமசுவாமி முதலியார் திருவாவடுதுறை மடத்தின் பழம் பெருமையை நன்குணர்ந்தவராதலின், தம்பிரானுடன் சம்பாஷணை செய்து வரும் போது மடத்து நிர்வாகத்தைப் பற்றிப் பேசுவதோடு நில்லாமல், கல்வி சம்பந்தமாகவும் விசாரிக்க ஆரம்பித்தார். “மடத்தில் தமிழ்க் கல்வியபிவிருத்திக்கு என்ன செய்கிறார்கள்? வித்துவான்களாக யார் யார் இருக்கிறார்கள்? எத்தனை பேர்கள் படிக்கிறார்கள்?” என்பவை போன்ற கேள்விகளை அவர் கேட்டார். தம்பிரான் ஏற்ற விடை அளித்து வந்தார். தமிழ், வடமொழி, சங்கீதம் என்னும் மூன்றிலும் சிறந்ததேர்ச்சியையுடைய வித்துவான்கள் அடிக்கடி மடத்துக்கு வந்து சம்மானம் பெற்றுச் செல்வார்களென்றும், ஆதீனத் தலைவரே சிறந்த கல்விமானென்றும், அவரிடத்திலும் சின்னப்பண்டார ஸந்நிதிகளிடத்திலும் பல மாணாக்கர்கள் தமிழ்ப் பாடம் கேட்டு வருகிறார்களென்றும் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்துக் கொண்டு வரும்போது அக்காலத்து மடத்துக் காரியஸ்தராக இருந்தவரும், தம்பிரானுடன் வந்தவருமாகிய சிவசுப்பிரமணியபிள்ளையென்பவர், “மடத்திலே படித்துக் கொண்டிருந்த மாணாக்கர்களுள் ஒருவராகிய சாமிநாதையர் என்பவரே இவ்வூர்க் கவர்ன்மென்ட் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருக்கிறார்” என்று சொன்னார். கேட்ட முதலியார், “அப்படியா? நான் அவரைப் பார்த்ததில்லை” என்றார்.

பின்னும் சில நேரம் பேசியிருந்து விட்டுத் தம்பிரான் முதலியோர் விடை பெற்றுச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் நிகழ்ந்தவற்றையெல்லாம் தெரிவித்தனர். உடனே ஆதீனத் தலைவர், “இப்போது அங்கே முன்ஸீபாக வந்திருக்கும் முதலியார் தமிழில் நல்ல பயிற்சி உடையவரென்று தோற்றுகிறது. அவரை நீங்கள் போய்ப் பார்த்து வரவேண்டும்” என்று எனக்குச் சொல்லியனுப்பினார்.

என்-34