பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

534

என் சரித்திரம்

கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கி எனக்கு அனுப்பினார். அதிலிருந்து காகிதத்திற் பிரதி பண்ணிய புஸ்தகம் இது.

“இவ்வளவு கஷ்டப்பட்டு இதனைப் பெற்றும் படிப்பதற்கு முடியவில்லை. நான் காலேஜில் படித்தபோது இதன் முதற் பகுதியாகிய நாமகளிலம்பகம் மாத்திரம் பாடமாக இருந்தது. அதை ஒரு துரை அச்சிட்டிருந்தார். அதில் தமிழைக்காட்டிலும் இங்கிலீஷ் அதிகமாயிருந்தது. நூல் முற்றும் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் நான் போகும் இடங்களில் உள்ள வித்துவான்களை எல்லாம் விசாரித்துப் பார்க்கிறேன். எல்லோரும் அந்தாதி, பிள்ளைத்தமிழ், புராணங்கள் இவைகளோடு நிற்கிறார்களே யொழிய மேலே போகவில்லை. அதனால் நான் மிகவும் அலுத்துப் போய்விட்டேன்.”

“புஸ்தகம் மிகச் சிறந்த புஸ்தகம். கம்ப ராமாயணத்தின் காவ்ய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி இதைப் படித்துப் பொருள் செய்து கொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்.”

முதலியார் கூறியவற்றை மிக்க கவனத்தோடு கேட்டு வந்தேன். தமிழ் நூற் பரப்பையெல்லாம் உணர்ந்து விளங்கிய பிள்ளையவர்கள் கூடச் சிந்தாமணியைப் படித்ததில்லையென்பதை நினைத்தபோது, ‘நாம் இந்தப் புதிய நூலைப் படித்துப் பொருள் செய்வது சுலபமாக இருக்குமா?’ என்ற அச்சம் சிறிது தோற்றினாலும், “தமிழ் நூல் மரபுக்குப் புறம்பாக இல்லாத நூல் ஏதாயிருந்தாலென்ன? ஸம்ஸ்கிருதமா, தெலுங்கா நூதனமாகப் பயிற்சி செய்து கொள்ள வேண்டுமென்பதற்கு? தமிழ் நூலை அறிவு கொண்டு ஆராய்ந்து படித்துப் பார்த்தால் விளங்காமலா போகிறது? எவ்வளவோ நூல்களைப் படித்ததாகச் சொல்லியும், ‘என்ன பிரயோசனம்?” என்று ஒரு கேள்வியில் தூக்கி எறியும்படி அந்தப் புஸ்தகத்தில் என்னதான் இருக்கிறது? பார்த்துவிடலாம்!” என்ற தைரியமே முன் நின்றது.

“பிற்பாடு வருகிறேன்; இதைப் படித்துப் பார்த்துக்கொண்டே வருகிறேன்” என்று உத்ஸாகத்தோடு சொல்லி இராமசுவாமி முதலியாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.