பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

556

என் சரித்திரம்

தொகை ஆயிற்றென்று உணர்ந்தேன். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அக நானூறு, புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத் தொகையாகும். ஒரு பழைய பாட்டிலிருந்து அந்த எட்டின் பெயர்களும் எனக்குத் தெரியவந்தன. எல்லாவற்றின் மூலத்தையும் சேர்த் தெழுதிய ஏட்டுச் சுவடி ஒன்று அக்கட்டில் அகப்பட்டது. அதில் கலித்தொகையும், பரிபாடலும் இல்லை.

எட்டுத் தொகையோடு பிள்ளையவர்கள் வைத்துக் கெண்டிருந்த வேறு ஓர் ஏட்டுச் சுவடி கிடைத்தது. அவர்கள் காலத்தில் அந்தச் சுவடியை எப்பொழுதாவது வெயிலில் எடுத்துப் போடுவார். முதலில் பொருநராற்றுப் படை என்று அதில் இருந்தது. “என்ன நூல் இது?” என்று கேட்டபோது, “இது திருமுருகாற்றுப் படையைப் போன்ற ஓர் ஆற்றுப்படை” என்று மாத்திரம் ஆசிரியர் சொன்னார். அதற்கு மேலே என்ன என்ன உள்ளனவென்று பார்க்கும் முயற்சி அக்காலத்தில் உண்டாகவில்லை. அந்தப் பிரதி தான் மடத்துப் புத்தக சாலையிலிருந்து கிடைத்தது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்து நூல்கள் சேர்ந்த தொகுதிக்குப் பத்துப் பாட்டு என்று பெயர். கடைச் சங்க காலத்தைச் சார்ந்த நூல்களுள் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் முக்கியமானவை. பத்துப் பாட்டு என்ற பெயரோ, அதில் அடங்கியவை இன்ன பாட்டுக்கள் என்பதோ அக்காலத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

பொருநராற்றுப்படை என்று இருந்த சுவடியை நான் அதிகமாகப் பார்க்கவில்லை. பதினெண் கீழ்க் கணக்கு அடங்கிய அபூர்த்தியான சுவடி ஒன்றும் கிடைத்தது. சிந்தாமணிப் பிரதி பழையதாக ஒன்று இருந்தது. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன்.

ஒரு தனிப் பிரபஞ்சம்

சீவகசிந்தாமணியை மாத்திரம் படித்து ஆராய்வதனால் அந்த நூலைப் பதிப்பிக்க இயலாதென்றும் மற்றப் பழைய நூல்களையும் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிந்தாமணியின் பொருள் விளக்கமாகுமென்றும் நான் உணர்ந்தேன். சிந்தாமணி உரையில் காணப்பட்ட மேற்கோள்களைத் தனியே எழுதி வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பார்த்து வருவேன். அதனால் அவை மனப் பாடமாகவே இருந்தன. அவற்றிற் சில அந்தப் பழைய ஏடுகளில்