பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

560

என் சரித்திரம்

“இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால்
வேறு மென்னின் இசைவதொன் றன்று கண்டீர்”

என்று ஒருவன் சொன்னதாக வரும் சந்தர்ப்பத்தில், யானையால் வெல்லுதல் அரிது என்பதை விளக்குவதன் பொருட்டு நச்சினார்க்கினியர் அந்த வாக்கியத்தை எழுதியிருக்கிறார். ஆகவே அங்கே இசையோடு சம்பந்தமுடைய விஷயம் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். இவற்றையெல்லாம் யோசிக்கையில் “யானை நாதத்தில் தோற்றுதலின்” என்று இருக்க வேண்டுமென நிச்சயித்தேன். பல பிரதிகளில் தெளிவாக “நாகத்தில்” என்றே இருந்தது. ஒரு பிரதியில் மாத்திரம் “நாதத்தில்” என்ற பாடம் காணப்பட்டது.

இப்படியே குருதி என்பதைக் குந்தியென்றெண்ணித் தடுமாறினேன். ஓரிடத்திலே, ‘திருத்தங்குமார்பன், புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்’ என்று இருந்தது. ‘இது ஜைன நூலாயிற்றே; பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் புகுந்துகொண்டது?’ என்ற சந்தேகம் வந்தது. மூலத்தில் “ஞமலிக் கமிர் தீர்ந்தவாறும்” என்று இருக்கிறது. ‘அமிர்து’ என்பதற்கு, ‘பஞ்சாட்சரமாகிய மந்திரம்’ என்பது உரையாக இருந்தது. ‘மந்திரத்தை யென்றிருந்திருக்க வேண்டும்: யாரோ பிரதியைப் பார்த்து எழுதின சைவர் பஞ்சாட்சரம் என்று சேர்த்தெழுதி விட்டார்’ என்று முதலில் கருதினேன். பின்னாலே வாசித்து வருகையில் “ஐம்பத வமிர்த முண்டால்” (946) என்று வந்தது. வேறிடங்களில் உள்ள உரையால் பஞ்ச நமஸ்கார மந்திரமென்று தெரிந்தது. ஜைன நண்பர்களை விசாரித்தேன். அவர்கள் மிகவும் எளிதில், “அருகர், ஸித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், ஸாதுக்களென்னும் பஞ்ச பரமேஷ்டிகளை வணங்குதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமஸ்காரமென்று சொல்வது ஸம்பிரதாயம்” என்று தெளிவுறுத்தினார்கள்.

இப்படித் தடுமாறித் தடுமாறிச் சிரமப்படுவதில் எனக்கு அலுப்புத் தோன்றவில்லை, மேலும், மேலும் உத்ஸாகமே உண்டாயிற்று. ஏதேனும் ஒரு மேற்கோளோ, ஒரு விஷயமோ, ஒரு பாடமோ தெரியாமல் மயங்கித் தவித்து நின்று பிறகு விளங்கினால் அதற்கு முன்பு பட்ட சிரமங்களெல்லாம் மறந்துபோகும்; பின்னும் பதின்மடங்கு ஊக்கம் ஏற்படும்.

இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் பேதந்தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள் பல. உரை இது, மூலம் இது, மேற்கோள் இது என்ற வேறுபாடு தெரியாமல் முட்டுப்பட்ட