பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று லாபங்கள்

567

வந்தீர்கள்? பண்டார ஸந்நிதிகள் சௌக்கியமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியிலிருந்து அவர்கள் என்னைப் பற்றித் தெரிந்தவர்களேயென்று உணர்ந்தேன்.

“உங்களை இன்னாரென்று தெரியவில்லையே” என்றேன் நான்.

“எங்களுக்கு உங்களை நன்றாகத் தெரியும்; நீங்கள் சுப்பிரமணிய தேசிகருக்குப் பக்கத்திலே இருப்பீர்களே! ஆஹா! என்ன சபை என்ன சங்கீதம்!”

எங்கேயோ இருக்கும் திருவாவடுதுறையின் புகழ் சென்னையில் அந்த இடத்தில் வீசியதற்குக் காரணம் சுப்பிரமணிய தேசிகருடைய தூய்மையும், வள்ளன்மையும், கல்விச் சிறப்பும், பெருமையுமே என்பதை உணர்ந்தேன். அந்த வித்துவான்கள் திருவாவடுதுறையில் நடைபெறும் குருபூஜைச் சிறப்பையும் சுப்பிரமணிய தேசிகர் வித்துவான்களுடைய தரமறிந்து சம்மானம் செய்யும் அழகையும் மற்ற விசேடங்களையும் பாராட்டினார்கள். அருகிலிருந்த மற்றவர்களுக்குத் திருவாவடுதுறை யாதீனத்தின் பெருமைகளையெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார்கள். “அப்படியா? அப்படியும் ஓர் இடம் இருக்கிறதா? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அந்த மடம் ஒரு பெரிய வித்தியாபீடமாக வல்லவோ இருக்க வேண்டும்?” என்று கேட்டவர்கள் விம்மித மடைந்தார்கள்.

அந்தக் கூட்டத்தினிடையே அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த போது நான் கரையற்ற இன்பக் கடலில் ஆழ்ந்திருந்தேன். சுப்பிரமணிய தேசிகர் பெருமையைச் சொல்லுவதில் நானும் கலந்து கொண்டேன்.

குட்டித் தம்பிரான்

ஒருநாள் சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து எனக்கு ஒரு திருமுகம் வந்தது. ‘சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோவில் தெரு மடத்திலுள்ள வித்துவான் ஆறுமுகத்தம்பிரானிடம் ஒரு குட்டித்தம்பிரான் படித்து வருவதாகத் தெரிகிறது. நாம் மகாமகத்துக்குக் கும்பகோணம் போயிருந்தபோது அந்தக் குட்டித் தம்பிரானைக் குன்றக்குடி மடத்துக் காரியஸ்தர் அப்பா பிள்ளையும், தெய்வ சிகாமணி ஐயரும் அழைத்து வந்து காட்டினார்கள். அவருடைய தோற்றப் பொலிவு கண்ணைக் கவர்ந்தது ஸம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் கூறிய விடைகள் திருப்தியை அளித்தன. அவர் கிடைத்தால் இங்கே சின்னப் பட்டத்திற்கு ஏற்படுத்தலாமென்று நினைக்கிறோம். அவருக்குச் சம்மதமிருந்தால் அவரோடு கலந்து கொண்டு அவரை இவ்விடத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று அதில் எழுதியிருந்தார்.