பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள்

587

இருபது பிரதிகளைப் பார்த்துச் சோதித்து எழுதப்பட்டதென்றும் அது சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சிட்ட பவர் துரையினுடையதென்றும் சூளை அப்பன் செட்டியார் என்னிடம் ஒருநாள் தெரிவித்தார். என் அன்பரும் சின்னசாமி பிள்ளையின் உறவினருமாகிய தில்லைவிடங்கன் வெண்பாப்புலி வேலுசாமி பிள்ளையுடன் சென்று அந்தத் தமிழ்ப் பண்டிதரைப் பார்த்தேன். அவரிடமுள்ள சிந்தாமணிப் பிரதியைப் பார்த்து விட்டுத் தருவதாகச் சொன்னேன்.

அவர் உள்ளே சென்று ஒரு பெரிய காகிதப் பிரதியை எடுத்துக் கொண்டு வந்தார். உருவத்தில் அது மிகப் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. சின்னசாமிபிள்ளை, “இந்தப் பிரதி பவர் துரையால் சோதித்து எழுதுவிக்கப்பட்டது. அவர் எனக்குப் பழக்கமானவர். ஊருக்குப் போகும்போது தம்முடைய ஞாபகம் இருப்பதன் பொருட்டு இதை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார்” என்று சொல்லி என் கையில் அதனைக் கொடுத்தார். ‘இருபது பிரதிகளைப் பார்த்துச் சோதிக்கப்பட்டதானால் எவ்வளவோ திருத்தமாக இருக்கும். நமக்கு மிகவும் உபகாரமாகும்’ என்ற ஆவலோடு அதை வாங்கிக் கொண்டு ஜாகைக்கு வந்தேன்.

உடனே அதை மிக்க வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். அதில் பிழைகளே மிகுதியாக இருந்தன. திருத்தமில்லாத பிரதிகளில் காணப்படும் பிழைகள் அவ்வளவும் அதில் காணப்பட்டன. திருத்தமில்லாத பிழைகள் ஆயிரம் கிடைத்தாலும் திருத்தமான பிரதி ஒன்றுக்கு ஈடாகா என்பதை நான் உணர்ந்தவன். பிழையுள்ள பிரதிகள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் கிடைக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு உபயோகமில்லாத பாட பேதங்கள் அதிகமாகிக் குழப்பமும் மிகுதியாகும். அளவற்ற பாட பேதங்களைக் காட்டி, ‘இவ்வளவு பிரதிகளைப் பார்த்தோம்’ என்பதைப் புலப் படுத்தலாமேயன்றி விஷயத்தை விளக்கமாகத் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். அந்தக் கடிதப் பிரதி எனக்குச் சிறிதும் பயன்படிவில்லை.

தனிமையில் செய்த வேலை

ஒவ்வொரு நாளும் அச்சுக்கூடத்திலிருந்து அச்சுப் பிரதிகளைத் திருத்திக் கொடுப்பேன். எனக்குத் துணையாக ஒழிவுள்ள நேரங்களில் வந்து சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும், ராஜ கோபாலசாரியரும், வேலுசாமி பிள்ளையும் கையெழுத்துப் பிரதியைப் படிப்பது முதலிய உதவிகளைப் புரிந்து வருவார்கள். மாலையானவுடன் அச்சுக்கூடத்திலிருந்து ‘புரூப்’களை எடுத்துக் கொண்டு இராமசுவாமி முதலியார் பங்களாவுக்குச் செல்வேன்.