பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பலவகைக் கவலைகள்

589

என்ற பாடலைச் சொல்லிக் கையொப்பப் புஸ்தகத்தைக் கொடுத்தேன். உடனே அவர் நூறு ரூபாய் தருவதாகச் சொல்லிக் கையொப்பம் இட்டார். பிறகு, “இந்தப் புஸ்தகம் சில நாள் என்னிடத்தில் இருக்கட்டும். வேறு சிலரிடம் சொல்லிக் கையொப்பமிடச் செய்கிறேன்” என்றார் அப்படியே பம்மல் விஜயரங்க முதலியார், ராஜா ஸர் சவலை ராமசாமி முதலியார். சூளை சிங்கார முதலியார் முதலிய கனவான்களின் கையொப்பங்களை அவர் வாங்கித் தந்தார்.

கும்பகோணம் வந்தது

1886-ஆம் வருஷம் கோடை விடுமுறை முடிவு பெற்றது. சிந்தாமணியில் பதினெட்டு பாரங்கள் (144 பக்கங்கள்) அச்சாகியிருந்தன. கும்பகோணம் புறப்பட வேண்டியவனாதலின் பதிப்பு மேலே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதற்குரிய ஏற்பாட்டைச் செய்தேன். “காலி புரூபை இங்கே நீங்களே பார்த்துவிடலாம்; மேலே பேஜ் புரூபையும் பாரம் புரூபையும் கும்பகோணத்துக்கு அனுப்புங்கள்” என்று சுப்பராய செட்டியாரிடத்திலும் ராஜ கோபாலாச்சாரியரிடத்திலும் தெரிவித்துக் கொண்டேன் அவ்விருவர்களுக்கும் உசிதமாகப் பொருளுதவி செய்ததுண்டு. அவர்கள் என் விருப்பத்தின்படியே செய்வதாகச் சொல்லவே நான் விடை பெற்றுக் கொண்டேன். சிந்தாமணிப்பதிப்பு நிறைவேறும் வரையில் உடனிருந்து பூர்த்தி செய்ய வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருப்பினும் காலேஜ் வேலையைப் பார்ப்பது என் வாழ்வுக்கு ஆதாரமான கடமையாக இருந்தமையின் என் மனம் முழுவதையும் சென்னையிலே வைத்துவிட்டுப் புகைவண்டியிலேறிக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

அத்தியாயம்—97

பலவகைக் கவலைகள்

சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு நான் வந்து சேர்ந்தவுடன் என்னுடைய அன்பர்களெல்லாம் வந்து சீவகசிந்தாமணிப் பதிப்பை ஆரம்பித்த சந்தோஷம் பற்றி விசாரித்தனர். அச்சிட்ட சில பாரங்களை நான் கையில் கொண்டு வந்திருந்தேன். அவற்றைப் பார்த்த காலேஜ் உபாத்தியாயர்கள் நன்றாயிருப்பதாகச் சொன்னார்கள். அப்போது காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த மிஸ்டர் பில்டர் பெக் துரை மூன்று பிரதிகள் வாங்கிக் கொள்வதாகக்