பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

592

என் சரித்திரம்

ஹிந்துவில் வந்த கடிதம்

சுதேசமித்திரன் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்த ஹிந்து ஆசிரியர் ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயருடைய பழக்கம் சென்னையில் எனக்கு உண்டாயிற்று. அவர் நான் சிந்தாமணியைப் பதிப்பித்து வருவதை யறிந்து அந்த நூலைப்பற்றியும் நான் பதிப்பிப்பதைப் பற்றியும் ஒரு குறிப்பெழுதித் தரச்சொல்லி அதனைத் தம் பத்திரிகையில் வெளியிட்டார். அன்றியும் அவ்வப்போது இன்ன இன்ன பகுதி வரையில் அச்சாகியுள்ளதென்ற செய்தியையும் தமிழ்ப் பத்திரிகையில் நான் வெளியிட்டு வந்தேன். ஹிந்து பத்திரிகையிலும் அந்தச் செய்தி வெளிவரும். அவற்றைக் கண்டு எனக்குக் கடிதம் எழுதிப் பல அன்பர்கள் பதிப்பைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். தமிழ் நூல்களில் அன்புடையவர்களிடையே இந்தச் செய்தி ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கிற்றென்றே தோற்றியது. எனக்குப் பழக்கமில்லாதவர்கள் பலர் தங்கள் தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்தும் என்னைப் பாராட்டியும் எழுதினார்கள். சிலர் அந்தப் பதிப்பில் சேர்த்துக் கொள்ளும்படி சிறப்புப் பாயிரங்கூட எழுதி அனுப்பி விட்டார்கள்.

1886-ஆம் வருஷம் ஜூலை மாதத்தில் ஹிந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வெளி வந்தது. அதில் ‘சாமிநாதையர் சிந்தாமணியை உரையுடன் பதிப்பிப்பதாகத் தெரிகிறது. அது நச்சினார்க்கினியரது உரையாக இருந்தால் தான் தமிழ் நாட்டினரால் ஏற்றுக் கொள்ளப்படும். சாமிநாதையர் உரையாக இருந்தால் பயன்படாது!’ என்ற கருத்து இருந்தது. எழுதினவர் தம் பெயரை வெளியிடாமல் புனைபெயர் பூண்டிருந்தார். அது வரையில் பாராட்டுக்களையே கேட்டு வந்த எனக்கு அக்கடிதம் சிறிது வருத்தத்தை உண்டாக்கிற்று. ‘நச்சினார்க்கினியரது உரையோடு வெளியிடுவதாகத் தனிப் பிரசுரத்தால் தெரிவித்திருப்பதோடு அவ்வப்போது பத்திரிகைகளிலும் அறிவித்து வருகிறோம். அப்படியிருக்க ஒன்றும் தெரியாதவர்போல் இப்படி எழுதி விட்டவர் ஏதோ கெட்ட நோக்கமுடையவராகத் தான் இருக்கவேண்டும்’ என்று ஊகித்துக் கொண்டேன். என் ஊகம் சரியே என்று பிறகு தெரிய வந்தது.

அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதுவது அவசியமென்று நண்பர்கள் வற்புறுத்தினார்கள். நானே எழுதுவதைவிட வேறு தக்க ஒருவரைக் கொண்டு எழுதுவித்தல் நலமென்று தோற்றியபடியால் உடனே சென்னையிலிருந்த இராமசுவாமி முதலியாருக்கு ஒரு கடிதம் எழுதித் தெரிவித்தேன். அவர் சிறிதும் தாமதமின்றி, “சீவகசிந்தாமணி மிகப் பழைய காவியம். அதைப் பல பிரதிகளைக்