பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி

619

அன்று மழை நன்றாகப் பெய்தது. ஆயினும், கும்பகோணத்திற் கையொப்பம் செய்தவர்களுக்குப் புஸ்தகங்களைக் கொடுக்க வேண்டுமென்று ஒரு வண்டியில் சில பிரதிகளை ஏற்றிக் கொண்டு முதலில் சாது சேஷையரிடம் சென்று கொடுத்தேன். அவர் வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் செய்தார். பிறகு மற்ற அன்பர்களை ஒவ்வொருவராகக் கண்டு புத்தகத்தை கொடுத்து விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

இராமலிங்க தேசிகர் வரவு

அன்று மாலை ஆறு மணிக்கு இராமலிங்க தேசிகர் என்பவர் வந்தார். அவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்தவர்; கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சைவப் பிரசங்கங்கள் செய்து பொருளீட்டிக் கொண்டு வந்தார். அங்கிருந்து கொணர்ந்த சில பொருள்களை எனக்கு அளித்ததோடு கருங்காலியாற் செய்த யானையொன்றையும் வழங்கினார். அவர் கொடுத்த மற்றப் பொருள்களை விட அந்த யானையினிடத்து அதிக விருப்பம் எனக்கு உண்டாயிற்று. என்னை உடனிருந்து பாதுகாக்கும் யானைமுகக் கடவுளே அந்த அடையாளத்தில் வந்ததாக நான் எண்ணிக் கொண்டேன்.

அவர் தமது பிரயாணத்தைப் பற்றியும் இலங்கையிலுள்ள கனவான்களைப் பற்றியும் சொல்லி, “ஸ்ரீ பொ. குமாரசுவாமி முதலியார் தமக்குச் சிந்தாமணிப் பிரதிகள் 15 அனுப்பினால் விற்றுப் பணம் அனுப்புவதாகச் சொன்னார். அவர் பெரிய செல்வர்; தமிழன்பிற் சிறந்தவர்” என்றார். நான் அவ்வாறே குமாரசாமி முதலியாருக்குப் பிரதிகளை அனுப்பிக் கடிதமும் எழுதினேன்.

சுப்பிரமணிய தேசிகர் மகிழ்ச்சி

மறு நாள் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் சேர்ப்பித்தேன். அவர் புஸ்தகங்களை மிக்க விருப்பத்தோடு பெற்று முகப்புப் பக்கத்தையும், முகவுரையையும், நூலாசிரியர் வரலாறு முதலியவற்றையும், நூலையும், உரையையும் பார்த்து மகிழ்ந்தார்.

அப்போது அவ்வூரிலுள்ளவர்களாகிய பொன்னோதுவார், மகாலிங்கம் பிள்ளை என்னும் இருவர் வந்து தேசிகரை வணங்கினர். அவ்விருவரும் யாழ்ப்பாணம் சென்று ஸ்ரீ ஆறுமுக நாவலர் மருகராகிய பொன்னையா பிள்ளையிடம் சில நாட்கள் இருந்து கம்பராமாயணம் முதலியவற்றைப் பாடங் கேட்டு விட்டு வந்த-