பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுப்பிரமணிய தேசிகர் வியோகம்

629

பத்துப் பாட்டுக் கையெழுத்துப் பிரதிகளைக் கையிலே கொண்டு போயிருந்தேன். மூலம் தனியேயில்லாத அந்தப் பிரதியை என் நண்பர் தேரழுந்தூர் இராசகோபாலாசாரியரிடம் காட்டி, “பிரதியில் தனியே மூலம் இல்லை, உரையுடன் சிறு சிறு பகுதிகள் மாத்திரம் உள்ளன. அந்தப் பகுதிகளும் அன்வயத்தால் முன்பின் மாறி இருக்கின்றன” என்று கூறினேன். அவர், “அந்தச் சிறு பகுதிகளான மூலங்களையெல்லாம் தனியே எழுதி வைத்துக்கொண்டால் பிறகு பொருளைக் கொண்டும் வேறு ஆதாரங்களைக் கொண்டும் ஒழுங்கு படுத்திக் கொள்ளலாமே” என்றார். அவருக்குச் சட்டென்று தோற்றிய அந்த யோசனை அதுகாறும் எனக்குத் தோற்றவில்லை. முல்லைப் பாட்டை அவர் கையிலே கொடுத்தேன். அவர் சில பகுதிகளை எழுதிக் காட்டினார். அவ்வாறே செய்வதாகச் சொல்லி அவருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொண்டேன். பிற்காலத்தில் எவ்வளவோ சிரமமான ஏட்டுப் பிரதிகளோடு போராட்டிக் கஷ்டப்பட்டு நல்ல அனுபவம் அடைந்தாலும் அச் சமயம் அவர் தெரிவித்தது எனக்குப் பரம உபகாரமாக இருந்தது.

சேலம் இராமசுவாமி முதலியாரோடு பொழுது போக்குவது எனக்கு இன்பமாக இருந்தது. பூண்டி அரங்கநாத முதலியாரையும் கண்டு பத்துப்பாட்டை ஆராயத் தொடங்கியிருக்கிறேனென்று தெரிவித்தேன். அவர் கேட்டு மகிழ்ந்தார்.

சின்னப் பட்டப் பத்திரிகை அச்சிட்டானவுடன் தபாலில் திருவாவடுதுறைக்கு அனுப்பி விட்டேன். தியாகராச செட்டியாருடைய பிரபந்தங்கள் அச்சிட்டு நிறைவேறும் நிலையில் இருந்தன.

துக்கச் செய்தி

ஒரு நாள் காலையில் எட்டு மணிக்கு இராமசுவாமி முதலியார் பங்களாவில் இருந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு கடிதம் வந்தது. பார்த்தேன்; கண்களில் நீர் வழிய அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்து விட்டேன். திருவாவடுதுறை ராயசம் பொன்னுசாமி செட்டியார், “இன்று (7-1-1888) மாலை நான்கு மணிக்கு மகா ஸந்நிதானம் பரிபூரணமாயிற்று. குறிப்பிட்டிருந்தவர்களுக்கே சின்னப் பட்டம் இன்று பன்னிரண்டு மணிக்கு ஆகிவிட்டது” என்று அதில் எழுதியிருந்தார்.

என் உள்ளத்துள் பெருந் துக்கம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்த உலகத்தில் பிள்ளையவர்களுக்குப் பின்பு பற்றுக்கோடாக யார் உள்ளார்களென்று ஏங்கியிருந்த எனக்கு நல்ல கொள்கொம்பாக உதவிக் கற்பகம் போல் வேண்டுவனவெல்லாம்