பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/660

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுப்பிரமணிய தேசிகர் வியோகம்

633

ஒரு கண்டனம்

குரு பூஜையின் இறுதி நாள் இரவு மடத்தில் ஒரு சபை கூடியது. புதிய தலைவராகிய அம்பலவாண தேசிகரது முன்னிலையில் பலர் சுப்பிரமணிய தேசிகர் பரிபூரணமானதற்கு இரங்கியும், புதிய தலைவரை வாழ்த்தியும் தாம் இயற்றிய செய்யுட்களைச் சொல்லிப் பொருள் கூறினார்கள். நான் அப்போது அங்கே இல்லை.

ஆதீனத்து அடியாராகிய பழனிக் குமாரத் தம்பிரானென்பவர் தாம் இயற்றிய இரங்கற் பாக்களை வாசித்து வந்தார். அவற்றுள் ஒரு பாட்டின் பகுதியாகிய, “குருமணி சுப்பிரமணிய குலமணியா வடுதுறைப்பாற் கொழித்துக் கொண்ட ஒரு மணி சிந்தாமணியை யுதவுமணி” என்பதற்குப் பொருள் சொல்லும் போது, “சிந்தாமணியை உதவுமணி” என்ற பகுதிக்கு, ‘இந்த மடத்தில் தமிழ்க் கல்வி கற்று இப்போது கும்பகோணம் காலேஜிலிருக்கும் சாமிநாதையர் சீவகசிந்தாமணியைப் பதிப்பிப்பதற்கு ஊக்கமளித்துப் பிரதி முதலியன கொடுத்த மகாஸந்நிதானத்தின் அருஞ் செயலை நினைத்தும் சொன்னேன்’ என்று ஒரு காரணம் கூறினாராம். அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவர், “சைவ மடமாகிய இந்த இடத்தில் ஜைன நூலுக்குச் சிறப்புத் தருவது நியாயமன்று. சாமிநாதையர் இந்தமடத்திற்கு வேண்டியவராக இருந்தும் உமாபதி சிவாசாரியார் ‘பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணி’ என்று சொல்லியிருக்கும் ஜைன நூலை அச்சிட்டது தவறு. அதை நாம் கண்டிப்பதோடு அந்த நூல் பரவாமல் இருக்கும்படி செய்ய வேண்டும்” என்றாராம். அவர் அயலூரிலிருந்து வந்து மடத்திற் சில காலம் தங்கியிருந்தவர். எனக்கும் பழக்கமானவரே.

அதைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும் திடுக்கிட்டனர். அவர்பால் அவர்களுக்குக் கோபமும் உண்டாயிற்று. அவரை உடனே எதிர்த்துத் தக்க நியாயங்கள் கூறி அடக்கி விட்டார்கள். என் நண்பராகிய புலிக்குட்டி இராமலிங்கத் தம்பிரான் அவர்மீது சில வசை கவிகளைப் பாடிப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர் காதிற் படும்படி சொல்லிக் காட்டச் செய்தார்.

இந்தச் செய்திகளைக் கேட்டு நான் வருத்தமடைந்தேன். என் அன்பர்கள், “தூஷணை செய்வதே தம் தொழிலாகக் கொண்ட பொறாமைக்காரர்கள் சிலர் உலகில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒரு சிறு காரணம் கிடைத்தாலும் போதும்; அதைப் பற்றுக்கோடாக வைத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். இதற்கெல்லாம் வருந்திப் பயனில்லை. உங்கள் உண்மை மதிப்பை-