பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

688

என் சரித்திரம்

ஸ்ரீ வைகுண்டம் முதலிய ஊர்களில் பல கவிராயர்கள் வீடுகள் உண்டு. ஆயிரக்கணக்கான ஏடுகளை அவ்வீடுகளிற் காணலாம். ஆகையால் தாங்கள் சிறிதும் அதைரியம் அடையவேண்டாம்” என்று கவிராஜர் சொன்னார். அந்த இடத்திற் கோவில் கொண்டிருந்த தமிழ்த் தெய்வமே எனக்கு அபயங் கொடுப்பதாக எண்ணிப் பின்னும் சுவடிகளை ஆராயலானேன்.

கொங்குவேள் மாக்கதை

அப்போது, ‘கொங்குவேள் மாக்கதை’ என்ற மேற் சீட்டையுடைய ஒரு பழஞ் சுவடியைக் கண்டேன். அந்நூல் இன்னதென்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்தப் பெயரை இலக்கணக் கொத்து உரையினால் நான் அறிந்திருந்தேன். அந்நூலாசிரியராகிய ஸ்ரீ சாமிநாத தேசிகர், சிலர் நல்ல நூல்களைப் படியாமல் வீணாகப் பொழுது போக்குவாரென்று கூறும் ஓரிடத்தில், திருவைக் கோவைக்குங் கூட்டுக; மாணிக்க வாசகர் அறிவாற் சிவனே என்பது திண்ணம். அன்றியும், அழகிய திருச்சிற்றம்பல முடையார் அவர் வாக்கிற்கு அலந்து இரந்து அருமைத் திருக்கையால் எழுதினார். அப்பெருமையை நோக்காது சிந்தாமணி சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாட்டு, கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்து அச்செய்யுட்களோடு ஒன்றாக்குவர்;... பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினென் கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணிவாணாள் வீணாள் கழிப்பர்’ என்று எழுதியிருக்கிறார். சைவராகிய அவர் வெறுத்து ஒதுக்கும் நூல்களுள் ஒன்று கொங்குவேள் மாக்கதையென்பது அப்போது ஞாபகத்துக்கு வந்தது. ‘கொங்குவேள் என்பவருடைய கதையாக இருக்கலாம்’ என்றெண்ணி அச்சுவடியை எடுத்து வைத்துக்கொண்டேன். எட்டுத் தொகையில் கலியும் பரிபாடலும் நீங்கலான மற்ற ஆறு நூல்கள் மாத்திரம் உள்ள பிரதி ஒன்று அங்கு இருந்தது. அதையும் வேறு சில நூல்களையும் கவி ராஜருடைய அனுமதி பெற்று எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் அவ்வீட்டில் உள்ள ஏட்டுப் பிரதிகளைப் பார்ப்பதில் சென்றன. பிறகு ஒரு நாட்காலையில் அவர்கள் என்னையும் உடனழைத்துக் கொண்டு தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் உள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்க்கலாமென்று புறப்பட்டார்கள்.

முதலில் அவர்கள் பந்துவும் மகா வித்துவானுமாகிய சாலிவாடீசுவர ஓதுவார் வீட்டிற்குச் சென்று பார்த்தோம். அப்பால் வேறு சில இடங்களுக்கும் சென்று பார்த்தோம். அவ்விடங்களில் பல