பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—105

பத்துப் பாட்டின் நல்ல பிரதிகள்
வேறு வீடுகள்

ல வீடுகளில் தேடியும் வந்த காரியம் கைகூடாமற்போகவே நான் உள்ளம் தளர்ந்து, “இன்னும் தேடக்கூடிய இடம் இருக்கிறதா?” என்று கவிராச நெல்லையப்பப் பிள்ளையைக் கேட்டேன்.

“உங்களுக்கு வேண்டிய சுவடி கிடைக்கவில்லையென்ற குறையைப் போக்க ஸ்ரீ நெல்லையப்பரே அருள் புரிய வேண்டும். ஒன்றும் தோற்றவில்லை. இன்னும் ஒரு வீடு இருக்கிறது. அங்கே கிடைக்கா விட்டால் பிறகு இந்த ஊரில் வேறு எங்கும் இல்லையென்றே நிச்சயம் செய்து விடலாம்.”

திருப்பாற்கடனாதன் கவிராயர்

“அது யார் வீடு?” என்று ஆவலோடு கேட்டேன். “எங்கள் முன்னோராகிய அம்பலவாண கவிராயருடைய மாணாக்கர்களுட் சிறந்தவராகத் திருப்பாற்கடனாதன் கவிராயரென்று ஒருவர் இங்கே வண்ணார் பேட்டையில் இருந்தார். அவர் மகா வித்துவான். அவர் வீட்டில் பல ஏட்டுச் சுவடிகள் உண்டு. போய்ப் பார்க்கலாம். இப்போது அவருடைய பேரர் அதே பெயரோடு இருக்கிறார்” என்றார்.

“இப்போதே புறப்படலாமே” என்று நான் துரிதப் படுத்தினேன்.

“வாருங்கள், போகலாம்” என்று சொல்லி அவ்வீட்டை நோக்கி என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் அவ்வீட்டிலிருந்த திருப்பாற்கடனாதன் கவிராயர் மிகவும் பிரியமாக வரவேற்றார். அவர் சிறந்த குணசாலியாகத் தோற்றினார். கவிராஜ நெல்லையப்ப பிள்ளை முதலில் அவரை மிகவும் பாராட்டி விட்டு என்னை அறிமுகப்படுத்தி, பத்துப் பாட்டு முதலிய சங்க நூல்களைத் தேடிப் பார்க்கும் பொருட்டு நான் வந்திருப்பதைத் தெரிவித்தார். உடனே அவர், ”அப்படியா, முன்னமே தெரியாமற் போயிற்றே. நேற்றுத்தான் இவ்விடம் ஸப் ஜட்ஜ் கனகசபை முதலியாரவர்கள் தம் நண்பர் ஒருவருக்காக எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு இம்மூன்றையும்