பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

660

என் சரித்திரம்

பத்துப்பாட்டுப் பிரதி ஏதேனும் இருக்கிறதா என்று பொள்ளாச்சி வித்துவான் சிவன்பிள்ளை என்பவருக்கு எழுதியிருந்தேன். அவர் தம்மிடமிருந்த பிரதி ஒன்றை அனுப்பினார். ஒரு வகையாக ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு திருமானூர்க் கிருஷ்ணையருடன் சென்னைக்குப் புறப்படச் சித்தமானேன்.

ஆறுமுகத் தம்பிரான்

1888 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி நல்ல நாளாக இருந்தது. அன்று காலையில் குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனமடத்துக் காறுபாறாகிய தாண்டவராயத் தம்பிரானும் அவ்வாதீன வித்துவானாகிய தில்லைநாத பிள்ளையும் என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தனர். “தங்களுடைய சகபாடியாகிய திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஆறுமுகத் தம்பிரானவர்களை எங்கள் ஆதீனத்துக்குச் சின்னப் பட்டமாக அபிஷேகம் செய்ய உத்தேசித்து அனுமதி கேட்பதற்காகத் திருவாவடுதுறைக்குப் போயிருந்தோம். ஸந்நிதானம் ஒப்புக் கொண்டது. தங்களிடத்திலும் இந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்துப் போக வந்தோம்” என்றார்கள். “எனக்கு அளவற்ற சந்தோஷம். படித்தவர்களை ஆதீனத் தலைவர்களாக நியமிப்பது நல்ல காரியம். ஆறுமுகத் தம்பிரான் நன்றாகப் படித்தவரே. நான் இன்று பத்துப் பாட்டை அச்சிடுவதற்காகச் சென்னைக்குப் புறப்படப் போகிறேன். இன்று இந்த நல்ல செய்தியைக் கேட்டது எனக்கு ஊக்கத்தை உண்டாக்குகிறது. உங்கள் முயற்சியும் என் முயற்சியும் அனுகூலமாக நிறைவேறுமென்று தோற்றுகிறது” என்று சொல்லி அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினேன்.

அம்பலவாண தேசிகர் செய்த உதவி

பிறகு என் தந்தையாரிடமும் பிறரிடமும் விடை பெற்றுக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்தேன். அங்கே ஆதீனத் தலைவராகிய அம்பலவாண தேசிகர் என் முயற்சியை அறிந்து மகிழ்ச்சியோடு எனக்கு உத்ஸாகமுண்டாக்கும் வார்த்தைகளைச் சொல்லி அறுபது ரூபாய் பணமும் வழங்கிச் சென்னைக்கு அனுப்பினார்.

மறுநாள் நானும் கிருஷ்ணையரும் சென்னையை அடைந்து சேலம் இராமசுவாமி முதலியார் பங்களாவில் தங்கினோம். அவர் அப்போது அலகாபாத்துக்குப் போயிருந்தார். கொண்டு சென்ற சாமான்களையெல்லாம் அவர் பங்களாவில் வைத்து விட்டு என் நண்பர்களைப் பார்க்கச் சென்றேன். தேரழுந்தூர் இராஜகோபாலா-