பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகார ஆராய்ச்சி

657

நாகரிக நிலையும் அதனால் தெரிய வந்தன. “பத்துப் பாட்டினைக் கொண்டு பலவகை ஆராய்ச்சிகளைச் செய்யலாம்” என்று அறிஞர்கள் கொண்டாடினர்.

சிறு நூல்கள்

அந்நூல் அச்சாகி வந்தபோது ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றிய ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது என்னும் பிரபந்தத்தின் மூலத்தையும், மாயூரம் ராமையார் இயற்றிய மயிலை யந்தாதி என்பதன் மூலத்தையும் பதிப்பித்து வெளியிட்டேன்.

பத்துப்பாட்டைப் பெற்ற அன்பர்கள் மிக்க மகிழ்ச்சியை அடைந்து பாராட்டுக் கடிதங்கள் எழுதி எனக்கு ஊக்கத்தை அளித்தனர். அது முதல் சிலப்பதிகார ஆராய்ச்சியில் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தேன்.

கச்சிக் கலம்பக அரங்கேற்றம்

அப்போது பூண்டி அரங்கநாத முதலியார் தாம்இயற்றிய கச்சிக் கலம்பகத்தை அச்சிட்டு முடித்துச் சில பண்டிதர்களைக் கொண்டு சென்னைத் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் கலாசாலையில் அரங்கேற்றச் செய்தனர். நானும் வந்து சில பாடல்களை அரங்கேற்ற வேண்டு மென்று அவர் எனக்கு எழுதியமையால் 1889 ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஒரு முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் சென்னை சென்று சில நாள் தங்கி அக்கலம்பகத்தின் சில செய்யுட்களை அரங்கேற்றி வந்தேன். அந்த அரங்கேற்றம் நடை பெற்ற காலத்தில் அதைக் கேட்க நூற்றுக் கணக்கான ஜனங்கள் கூடினர். நான் படித்திருந்த பிரபந்தங்களும் வேறு நூல்களும் அப்போது மிகவும் பயன்பட்டன. அரங்கநாத முதலியாருடைய பழக்கம் பின்னும் வன்மையடைந்ததோடு தமிழபிமானிகள் பலருடைய பழக்கம் புதிதாக ஏற்பட்டது. அரங்கநாத முதலியாருடைய செல்வாக்கும் அரங்கேற்றப் பிரசங்கமும் சேர்ந்து எனக்குப் பல வகை நன்மைகளை உண்டாக்கின.

பத்துப் பாட்டுப் பதிப்புக்குச் சென்னையிலிருந்து உதவி செய்து வந்த கிருஷ்ணையர் அப்பதிப்பு முடிந்தவுடன் வேலூருக்குச் சென்று சிலகாலம் இருந்தார். பிறகு சிறுவயல் சென்று அவ்விடத்து ஜமீன்தாராகிய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவருடைய ஆதரவில் அவருக்கு நல்ல தமிழ் நூல்களைப் படித்துக் காட்டிக் கொண்டு அரண்மனை வித்துவானாக இருந்து வந்தார். அங்கே இருந்தபோதும் எனக்காகப் புறநானூறு முதலிய நூல்களைப் பிரதி செய்து அனுப்பினார்.