பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகார ஆராய்ச்சி

671

தென்று எனக்குச் சில குறிப்புக்களால் தெரிய வந்தது. ஆனாலும் என்பாலிருந்த அப்பிரதியைக் கொண்டு நூற்பொருளைத் தெரிந்து கொள்வது மிகவும் அரிய செயலாக இருந்தது. அடியார்க்கு நல்லார் உரையில் சில இடங்கள் நன்கு விளங்குவதற்கு அரும்பதவுரைக் குறிப்புக்கள் நன்கு உதவின.

உரையிற் குறை

அடியார்க்கு நல்லார் தம் உரையில் ஓரிடத்தில், ‘கானல் வரியில் விரியக் கூறுவம்’ என்றும், கானல் வரியின் பின் ஓரிடத்தில் ‘முன்னர் ஆணி யென்பதனுட் கூறினாம்’ என்றும் எழுதியிருக்கிறார். இவற்றைப் பார்த்த போது அவர் கானல்வரிக்கு உரை எழுதியிருக்கிறாரென்பது நிச்சயமாயிற்று. வேறிடங்களில் அழற்படுகாதைக் கண்ணே விரித்துக் கூறுதும், ‘கட்டுரை காதையுள் விரியக் கூறுவாம்’ என்றும் எழுதியிருத்தலால் பின்னுள்ள காதைகளுக்கும் உரை எழுதியிருக்கக் கூடுமென்று தோற்றியது. ஆகவே மீண்டும் தமிழ்ச் சுவடிகள் தேடும் யாத்திரையை மேற்கொண்டு சிலப்பதிகாரப் பிரதிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.

உரையிலுள்ள குறை ஒரு பால் இருப்ப, அதன் கண் வரும் இசை நாடகப் பகுதிகள் இக்காலத்தில் வழங்காதனவாக இருந்தன. அவற்றைச் செப்பஞ் செய்வதற்கு நெடுங் காலம் ஆகுமென்றஞ்சினேன். ‘எதைத் தொட்டாலும் சிரமத்தின் மேற் சிரமமாக இருக்கிறதே’ என்ற எண்ணம் உண்டாயிற்று.

அன்பர்களுக்கு எழுதிய கடிதங்கள்

அது காறும் தேடாத இடங்களுக்குப் போய்ப் பார்க்கலாமென்ற நினைவு உண்டாகவே, “சேலத்தைச் சார்ந்த இடங்களில் தமிழ்ச் சுவடிகள் கிடைக்கலாம். சிலப்பதிகாரத்தின் பிற்பகுதிக்கு உரை கிடைக்க வில்லை. தஞ்சை வாணன் கோவைக்கு உரை எழுதிய சொக்கப்ப நாவலர் முதலிய புலவர்கள் சேலத்தில் இருந்ததாகக் கேள்வி. அவர்கள் பரம்பரையினர் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். அங்கே தேடிப் பார்த்தால் எவையேனும் கிடைக்கலாம். தங்கள் உதவி வேண்டும்” என்று சேலம் இராம சுவாமி முதலியாருக்கு எழுதினேன்.

குன்றக்குடி மடத்தில் முக்கியமான காரியஸ்தராக இருந்த அப்பாப் பிள்ளை என்பவருக்குச் சிவகங்கையைச் சார்ந்த இடங்களில் தமிழ் ஏட்டுச் சுவடிகள் கிடைக்கக் கூடுமென்றும், இருக்கும் இடம் தெரிந்தால் நான் வந்து பார்ப்பேனென்றும் எழுதினேன்.