பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

காட்டிலும் ஆரம்பத்திலிருந்து வரலாறுகளைப் பத்திரிகை மூலமாக வெளியிட்டு வந்தால் படிப்பவர்களுக்கு அனுகூலமாக இருக்குமென்றகருத்து ஏற்பட்டது. அப்பொழுது "ஆனந்தவிகடன்" பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த ஸ்ரீ ரா. கிருஷ்ணமூர்த்தி ஐயரவர்கள். ஸ்ரீ S. S. வாசன் அவர்களுடன் இரண்டொரு முறை வந்து எந்தையாரவர்களுடன் சம்பாஷித்து, சுயசரிதத்தை ஆனந்தவிகடனில் வாரந்தோறும் ஒவ்வோர் அத்தியாயமாக வெளியிடலாமென்று அதற்குரிய ஏற்பாட்டைச்செய்தனர். அவர்கள் விரும்பியவண்ணமே, 1940-ஆம் ஆண்டு முதல் சரித்திரம் எழுதி வெளியிடுவதென்று நிச்சயமாயிற்று. அச்சமயம் புத்தகப் பதிப்பு வேலைகளில் உடனிருந்து கவனித்து வந்த ஸ்ரீ. கி. வா. ஜகந்நாதையர் B. O.L . என் தந்தையாரவர்கள் அவ்வப்போது சரித்திர சம்பந்தமான நிகழ்ச்சிகளைக் கூற, அவைகளை எழுதி வரலானார். முதல் அத்தியாயம் 6-1-1940ல் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. ஆறு அத்தியாயங்கள் முதலில் ஆனந்தவிகடன் காரியாலயத்தில் சேர்ப்பிக்கப்பெற்றன. சில அன்பர்கள் விரும்பியபடி சரித்திர சம்பந்தமான படங்கள் அங்கங்கே அமைக்கப் பெற்றன. பிறகு அவ்வப்பொழுது அவ்வப்பகுதிக்குரிய விஷயங்கள் பத்திரிகாலயத்திற்கு எழுதி அனுப்பப் பெற்று வந்தன. அக்காலங்களில் உடனிருந்து ஸ்ரீ ஜகந்நாதையர் எந்தையாரவர்கள் விருப்பப்படி சொல்லியவற்றை எழுதித் தவறாது பத்திரிகையில் வெளி வருவதற்கு மிக்க உதவி புரிந்தார். சரித்திரம் வெளிவரவேண்டு மென்ற ஊக்கத்துடனிருந்து அதற்குரிய வேலைகளையும் எந்தையாருடன் இருந்து சுவனித்து உதவியது மிகவும் பாராட்டற்குரியதாகும். அவ்வுதவியை என்றும் மறவேன்.

சரித்திரத்தில் படங்கள் வெளிவருவதன் பொருட்டு வெளியூர் அன்பர்கள் புகைப்படங்கள் எடுத்து எங்கள் விருப்பத்தின்படி அனுப்பி உதவினார்கள். இப்பொழுது துறைசை ஆதீனகர்த்தர்களாக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் அவர்கள் திருவாவடுதுறை, மாயூரம், திருவிடைமருதூர், திருப்பெருந்துறை இவைகள் சம்பந்தமான படங்களை அனுப்பச் செய்து உதவினார்கள்.

1940-ஆம் வருஷம் முதல் வாரந்தோறும் ஓர் அத்தியாயமாக 1942 மே மாதம் வரையில் 'சுயசரிதம்' ஆனந்தவிகடனில் வெளிவந்தது; என் தந்தையாரவர்கள் சரித்திரப் பகுதியை அவ்வப்பொழுதே எழுதிவரச் செய்யும் பழக்கத்தை மேற்கொண்டனராதலால் ஆனந்தவிகடனில் அவர்கள் காலஞ்சென்றபின்பு தொடர்ச்சி-