பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

674

என் சரித்திரம்

உடம்பை மாத்திரம் பாதுகாப்பவரல்லர்; தம் உடம்பையும் பாதுகாத்துக் கொள்பவர்” என்று எண்ணிக் கொண்டேன்.

அகத்தியர் நூல்

அவர் தம் வீட்டில் தனியே ஓர் அறையில் ஏட்டுச் சுவடிகளை ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தார். உள்ளே புகுந்த போது ஐந்நூறுக்குக் குறையாத ஏடுகள் இருக்கலாமென்று தெரிந்தது. “இவற்றில் பழைய சுவடிகள் என்ன என்ன இருக்கின்றன?” என்று கேட்டேன்.

“எல்லாம் பழைய சுவடிகளே; அகஸ்தியர் இயற்றிய நூல்கள் முதற் கொண்டு எல்லாம் இருக்கின்றன” என்றார்.

அகஸ்தியரென்றவுடன் அவர் இயற்றிய அகத்தியமென்ற பெரிய இலக்கண நூல்தான் ஞாபகம் வந்தது. “எங்கே, அந்தச் சுவடியை எடுங்கள்” என்று சொல்லி உட்கார்ந்தேன். அவர் ஏதோ ஒன்றை எடுத்துக் கொடுத்து, “எங்கள் குடும்பம் பரம்பரையாக இந்தச் சுவடிகளைக் காப்பாற்றி வருகிறது. மிகவும் அருமையான சுவடிகள் இவை. இங்கே உள்ளவற்றை வேறிடங்களிற் பார்ப்பது அரிது” என்றார்.

நான் ஏட்டைப் பிரித்துப் பார்த்தேன். எழுத்துக்கள் மிகவும் விளக்கமாக இருந்தன. ஏட்டின் தலைப்பில் ‘அகஸ்தியர் பூரணம்’ என்பது போன்ற ஏதோ ஒரு பெயர் இருந்தது. உள்ளே புரட்டினேன். அது வைத்திய நூலாக இருந்தது. அகஸ்திகர் இயற்றியனவாக வழங்கும் பல நூல்கள் அங்கே இருந்தன எல்லாம் வைத்திய நூல்களே. சில சுவடிகளைப் பார்த்துச் சலித்தேன்.

“இலக்கண இலக்கிய ஏடு ஒன்றும் இல்லையா?” என்று ஆறுமுகம் பிள்ளையைக் கேட்டேன்.

அவர் இல்லையென்று சொல்லி விட்டார். நான் பேசாமல் வந்த வழியே திரும்பினேன்.

பாகற்பட்டி

பிறகு பாகற்பட்டி என்னும் ஊருக்குப் போய் அவ்வூர் மிட்டாதாராகிய ஸ்ரீநிவாஸ நாயகரென்பவருடைய புஸ்தகசாலையைப் பார்த்தேன். அவர் தமிழன்பு மிக்கவர். கம்ப ராமாயணத்தில்