பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்க் கோயில்

691

சிற்றம்பலக் கவிராயரென்பவருக்கு மிதிலைப்பட்டியை வெங்களப்ப நாயக்கரென்ற ஜமீன்தார் கொடுத்தார். அது முதல் அவ்வூரில் அழகிய சிற்றம்பலக் கவிராயர் வாழ்ந்து வரலாயினர்.

இராமநாதபுரம் சேதுபதிகளிடமிருந்தும், மருங்காபுரி ஜமீன்தார்களிடமிருந்தும் சிவகங்கை ஜமீன்தார்களிடமிருந்தும், புதுக்கோட்டை அரசர்களிடமிருந்தும் அப்பரம்பரையினர் பல பல பரிசுகளைப் பெற்றார்கள்.

“எங்கள் முன்னோர்கள் யானைப்பரிசில் பெற்றார்கள். இதோ பாருங்கள்; இதுதான் யானைகட்டும் கல். அவர்களுக்குச் சிவிகையிற் செல்லும் கௌரவம் இருந்தது. இப்போது அந்தச் சிவிகை அந்தப் பழங்காலத்தை ஞாபகப்படுத்திக் கொண்டு இதோ இருக்கிறது பாருங்கள்” என்று கவிராயர் அவ்விரண்டையும் எங்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

“எங்கள் பெரியவர்கள் எவ்வளவோ பிரபந்தங்கள் இயற்றியிருக்கிறார்கள். எவ்வளவோ மானியங்களைப் பெற்றார்கள். அவர்கள் ஈட்டிய செல்வத்தை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம். ஆனால் அவர்களைப் போன்ற தமிழறிவோ வாக்கோ எனக்கு இல்லை. இங்கே மேலை வீட்டில் குமாரசாமிக் கவிராயர் என்ற என் தாயாதி ஒருவர் இருக்கிறார். அவர் நான்றாகப் படித்தவர்” என்று சொன்னார். அவர் அப்படி அடக்கமாகச் சொல்லிக் கொண்டாலும் அவருக்குத் தமிழன்பு இருந்தது; பரம்பரை வித்தையாதலால் செய்யுள் இயற்றும் பழக்கமும் சிறிது உண்டு. இந்தக் குடும்பத்தைச் சார்ந்த சில முதியவர்களுக்கு அந்தப் பழக்கம் நன்றாக இருந்தது.

அவர் வீட்டிலிருந்த சுவடிகளெல்லாம் மிகவும் திருத்தமாக இருந்தன. ஓர் ஏட்டின்மேல் புறநானூறு உரை, சிலப்பதிகார உரை என்ற குறிப்பு இருந்தது. குருடனுக்குக் கண் கிடைத்தது போல எனக்கு அளவற்ற ஆனந்தம் உண்டாயிற்று பிரித்துப் பார்த்தேன் புறநானூறு மட்டுந்தான் இருந்தது; சிலப்பதிகார உரை இல்லை. வேறு சுவடிகளோடு கலந்து இருக்குமோ என்று தேடித்தேடிப் பார்த்தேன். கிடைக்கவே இல்லை. ‘என்னுடைய துரதிருஷ்டம்’ என்றெண்ணி மனம் நைந்தேன்.

‘திருவிளையாடற் பயகர மாலை’ என்ற ஒரு பிரபந்தம் உரையோடு கிடைத்தது. ‘திருவிளையாடற் பயங்கரமாலை’ என்ற பெயரோடு ஒரு சிறிய நூல் மிகப்பிழையாக அச்சிலிருப்பதை நான் படித்திருக்கிறேன். அதற்குப் பயங்கரமாலை என்று ஏன்