பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தைப்‌ பருவம்‌

49

அக்காலத்தில் கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனத்தை இயற்றிப் புகழ் படைத்திருந்தார். பல இடங்களில் அந்தச் சரித்திரத்தைப் பிரசங்கம் செய்து வந்தார். தமிழ்நாடு முழுவதும் நந்தன் சரித்திரத்திற்கு ஒரு பிரசித்தி உண்டாகி இருந்தது. தாம் நந்தனார் சரித்திரத்தை இயற்றுவதற்குக் காரணமாக இருந்த [1]நிகழ்ச்சிகளையும் தம் அநுபவங்களையும் என் தந்தையாரிடம் அவர் சொல்லி மகிழ்வார்; தம்முடைய கீர்த்தனங்களையும் பாடிக் காட்டுவார். என் தத்தையார் அவரிடமிருந்து பல கீர்த்தனங்களைத் தெரிந்துகொண்டார்; மாயூரத்திற்கு எந்தையார் எப்பொழுது சென்றாலும் பாரதியாரைப் பாராமல் வருவதில்லை.

பாரதியாருடைய பழக்கம் ஏற்பட்ட பின்பு நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களிற் சிலவற்றையும் என் தந்தையார் தம் இராமாயணப் பிரசங்கத்தினிடையே பாடிக் காட்டலானார். அக்கீர்த்தனங்களின் எளிய நடையும் அவற்றில் அமைந்திருந்த பக்திச் சுவையும் கேட்போர் உள்ளங்களைக் கவர்ந்தன.

என் குழந்தைப் பிராயத்தில் எனக்கிருந்த பழக்கம் ஒன்றை என் தாயார் சொல்லியிருக்கிறார்; நான் காலையில் எழும்பொழுதே எனக்கு ஏதேனும் ஆகாரம் கொடுக்க வேண்டுமாம். ரொட்டி, பிஸ்கோத்து முதலிய உணவுப் பொருள்கள் அந்தக் காலத்தில் இல்லை. என் தாயார் எனக்காக ஒரு கரண்டியப்பம் ஊற்றி ஓர் இலையில் என் படுக்கையின் பக்கத்தில் வைத்து ஒரு பாத்திரத்தால் மூடி வைத்திருப்பாராம். நான் எழுந்தவுடன் அந்தப் பாத்திரத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு உள்ளே இருக்கும் கரண்டியப்பத்தை எடுத்துத் தின்பேனாம். காலையில் எந்தக் காரியத்தைச் செய்ய மறந்தாலும் எனக்காகக் கரண்டியப்பம் பண்ணி வைப்பதை மாத்திரம் என் தாயார் மறக்க மாட்டாராம். கரண்டியப்பம் சாப்பிட்ட சிறிது நேரத்துக்குப் பிறகு பழையமுதும் சாப்பிடுவதுண்டு.

நாங்கள் அரியிலூரில் இருந்து வருகையில் என் பாட்டனாருக்கும் பாட்டியாருக்கும் முதுமைப் பருவத் தளர்ச்சி மிகுதியாயிற்று. எந்தச் சமயத்தில் தமக்கு மரணம் சம்பவிக்குமோ என்று என் பாட்டனார் கலக்கமடைந்திருந்தார். பரம்பரையாக இருந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு வந்து இருப்பதில் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. வேறுவழி இல்லாமையால் அரியிலூரில் வந்து இருந்தார். ஆயினும், வந்த ஊரிலே இறப்பதை அவர் விரும்ப-


  1. இவற்றை நான் எழுதிப் பதிப்பித்துள்ள கோபால கிருஷ்ண பாரதியார் சரித்திரத்திற் காணலாம்.

என்.—4