பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

624

என் சரித்திரம்

மணிமேகலையையும் இடையிடையே ஆராய்ந்தமையால் அதிலும் பல திருத்தங்கள் கிடைக்குமென்று தெரிந்தது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று சிலப்பதிகாரத்தைச் செப்பஞ் செய்யத் தொடங்கினேன். மிதிலைப்பட்டிப் பிரயாணம் நேர்ந்திராவிட்டால், கலங்கியிருந்த என் மனத்தில் அமைதி தேன்றியிராது. அந்த நினைவினாலேதான் மிதிலைப்பட்டியைப் பற்றிப் பிற்காலத்தில், “தமிழ் நாட்டில் எவ்வளவோ புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன. சிவ ஸ்தலங்களும் விஷ்ணு ஸ்தலங்களும் சுப்பிரமணிய ஸ்தலங்களும் பல உள்ளன. அவற்றைப் போலத் தமிழ்த் தெய்வம் கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களுள் ஒன்றாகவே மிதிலைப்பட்டியை நான் கருதியிருக்கிறேன்” என்று[1] எழுதினேன்.


அத்தியாயம்—113

ஹிருதயாலய மருதப்பத் தேவர்
வேறு வீடு

ன் பிரயாணங்களும் ஆராய்ச்சியும் விரிய விரிய என் தமிழ்க் குடும்பமும் தமிழ்நூற் செல்வமும் அதிகமாயின. அவற்றைப் பாதுகாப்பதற்குப் போதிய வசதி அவசியமாயிற்று. நான் இருந்த வீட்டில், மேலும் மேலும் நான் கொணர்ந்து சேர்க்கும் ஏட்டுச் சுவடிகளை வைப்பதற்கும், அன்பர்களுடன் இருந்து ஆராய்ச்சி செய்வதற்கும் இடம் போதவில்லை. ஆதலால் 1891-ஆம் வருஷம் ஜு ன் மாதம் முதல் முன்பிருந்த பக்தபுரி அக்கிரகாரத்திலேயே வடவண்டைக் கோடியிலுள்ள ஒரு மெத்தை வீட்டை மாதம் ரூ.6 வாடகைக்குப் பேசி அதிலே இருந்து வரலானேன்.

புதிய வீட்டுக்கு வந்தவுடன் நல்ல சுவடிகளை மேலும் தேடித் தொகுக்கலாமென்றும் பல மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லலாமென்றும் பலரை வைத்துக் கொண்டு தமிழாராய்ச்சி செய்யலாமென்றும் என் யோசனை விரிந்தது.

என் குமாரனுக்கு உபநயனம் நடைபெற்றபோது பல கனவான்கள் பலவகையான உதவிகள் செய்தனர். அவர்களுள் ஊற்றுமலை ஜமீன்தாராகிய ஹிருதயாலய மருதப்பத் தேவரும் ஒருவர்.


  1. ‘நான் கண்டதும் கேட்டதும்’ என்னும் புஸ்தகத்திலுள்ள ‘பரம்பரைக் குணம்’ என்னும் 8-வது கட்டுரையைப் பார்க்க.