பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹிருதயாலய மருதப்பத் தேவர்

697

தோற்றம்

வண்டி ஊற்றுமலையை அணுகியபோது எதிரே சாலையில் ஒரு சிறு படை வந்தது. அதைக் கண்டவுடன் என்னுடன் வந்த ஒருவர், “அதோ, ஜமீன்தார் வருகிறார்” என்றார். நான் உடனே வண்டியை நிறுத்தச் செய்து கீழிறங்கினேன்.

நான் இறங்கியவுடன், “மிகவும் சந்தோஷம். தங்களை வரவேற்கத்தான் இந்த வழியாக வருகிறேன்” என்று ஒரு கம்பீரமான தொனி கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் வேட்டைக் கோலத்தில் ஒரு வீரர் நின்றார் சுற்றிலும் பார்த்தேன். அவரைச் சூழ்ந்து ஆயுதபாணிகளாகிப் பல மறவர்கள் மிக்க வணக்கத்தோடு நின்றார்கள். பல நாய்கள் உடன் வந்தன. ‘நம்மை வரவேற்கவா இந்த வேட்டைக் கோலத்தோடு வந்திருக்கிறார். இவர் பழங்காலத்து வீரரைப் போலவல்லவோ இருக்கிறார்?” என்று எண்ணினேன். என் கண்கள் அவருடைய தோற்றத்தில் ஈடுபட்டு அடி முதல் முடி வரையில் நோக்கின. அவருக்கு அப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் இருக்கும்.

“அவ்விடத்தில் சிரமம் வைத்துக் கொள்வானேன்? நான் அரண்மனையிலே வந்து கண்டிருப்பேனே” என்று புன்னகையுடன் சொன்னேன்.

“நீங்கள் வருவதாக எழுதியது முதல் ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் நேரே அரண்மனைக்குச் செல்லுங்கள். சிறிது தூரம் போய் வந்து விடுகிறேன்” என்று சொல்லி அவர் புறப்பட்டார்.

நான் அரண்மனையை அடைந்தேன். எனக்கு மிகவும் வசதியுள்ள ஜாகை ஹஜார வாசலின் மெத்தையில் அமைத்திருந்தார்கள். போனவுடன் ஸ்நானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. பிறகு சிற்றுண்டிகளுடன் காபியும் கிடைத்தது. எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு எட்டு மணிக்கு ஆஸ்தானத்துக்குப் போனேன். அங்கிருந்த ஜமீன்தார் என்னைக் கண்டவுடன் எழுந்து, “இருக்க வேண்டும்” என்று உபசரித்தார். அவ்விடத்தில் நான்கு புலவர்கள் உடன் இருந்தனர். முத்துவீரப் புலவர், அண்ணாமலைப் புலவரென்று இருவர் பெயர்கள் மாத்திரம் ஞாபகம் இருக்கின்றன. நான் அமர்ந்தேன்.

தமிழ்ப் பயிற்சி

ஜமீன்தார் அந்த நான்கு புலவர்களுடன் திருவானைக்காப் புராணம் படித்துக் கொண்டிருந்தார். எனக்கு அவர் சில