பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

720

என் சரித்திரம்

பிற்காலத்தில் என் புத்தகப் பதிப்புக்கு உதவியாக இருந்த பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் கம்பர் சம்பந்தமான இவ்விஷயங்களை என்னிடம் தெரிந்து கொண்டு இவற்றையும் வேறு சில விஷயங்களையும் சேர்த்துத் தாம் பதிப்பித்த தமிழ்ப் பாட புத்தக உரையில் வெளியிட்டிருக்கிறார்.

நவராத்திரி விழா

அவ்வருஷம் நவராத்திரி விழாவுக்கு வரவேண்டுமென்று இராமநாதபுரம் ஸ்ரீ பாஸ்கர ஸேதுபதியிடமிருந்து எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் காலேஜில் பத்து நாட்கள் ரஜா பெற்றுக் கொண்டு புறப்பட்டு மதுரையில் இறங்கி மாட்டு வண்டியில் இராமநாதபுரம் சென்றேன். வழியில் பல வண்டிகள் தாங்க முடியாத பண்டங்களை ஏற்றிக்கொண்டு சென்றன. பார மிகுதியால் பல அச்சு முறிந்தன. எல்லாம் இராமநாதபுரத்தை நோக்கிச் செல்வதை அறிந்து நவராத்திரி விழாவின் சிறப்பை ஒருவாறு ஊகித்துக் கொண்டேன்.

இத்தமிழ் நாட்டிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் நூற்றுக் கணக்கான வித்துவான்கள் வந்திருந்தார்கள். தமிழ்நாட்டுக் கனவான்களில் ஒருவர் பாக்கியில்லையென்று தான் சொல்ல வேண்டும். ஊர் தாங்காத கூட்டம் கூடியிருந்தது. பண்டங்களின் விலையெல்லாம் பன் மடங்கு ஏறி விட்டது.

சேதுபதி மன்னர்களின் குல தெய்வமாகிய ராஜ ராஜேசுவரி அம்பிகைக்கு 1008 சங்கம் வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பூஜை முதலியன மிக விரிவாக நிகழ்ந்தன. மேளக் கச்சேரி, சங்கீத வினிகைகள் முதலியவற்றிற்குக் கணக்கேயில்லை. ஸம்ஸ்கிருத வித்வான்களின் சபையும் தமிழ்ப் பண்டிதர்களின் சபையும் நடந்தன.

மகா வைத்தியநாதையர் அப்போது தேக அசௌக்கியத் தோடிருந்தமையால் வரவில்லை; அவர் தமையனார் மாத்திரம் வந்திருந்தார். இரட்டையரைப்போல அவ்விருவர்களையும் ஒருங்கு பார்த்தே பழகிய எனக்கு இராமசுவாமி ஐயரைத் தனியே பார்த்த போது உயிரில்லா உடம்பைப் பார்ப்பதுபோல இருந்தது “தங்கள் சகோதரர் வரவில்லையே; தேக அசௌக்கியம் கடுமையாக இருக்கிறதோ?” என்று கேட்டேன்.

“ஆம்; பிரணதார்த்திஹரர் திருவருள் என்ன செய்கிறதோ! நான் கூட வருவதாக இல்லை. வைத்தி தான் ‘போய்விட்டு வா’ என்றான். பல காலமாகப் பழகிய இடம்; அதனால் வந்தேன்” என்றார்.