பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறநானூற்று ஆராய்ச்சி

723

அன்றியும் அது பௌத்த சமய சம்பந்தமுள்ளது. அச்சமய நூற் கருத்துக்களை தான் முற்றும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அந்த நிலையில் புறநானூற்றையே முதலில் அச்சிடலாமென்ற முடிவுக்கு வந்தேன்.

இடையில், திருப்பெருந்துறைக் கட்டளை விசாரணை ஸ்ரீ சுப்பிரமணியத் தம்பிரான், பிள்ளையவர்கள் இயற்றிய அந்த ஸ்தல புராணத்தை வெளியிடவேண்டுமென்று விரும்பினமையால் 1892-ஆம் வருஷ இறுதியில் அதனை வெளியிட்டேன். குறிப்புரை முதலியவற்றை எழுதவேண்டுமென்று விருப்பம் இருந்தும், விரைவில் வெளிப்படுத்த வேண்டுமென்று தம்பிரான் வற்புறுத்தியமையால் மூலத்தை மாத்திரம் வெளியிட்டேன்.

மேலே புறநானூற்றை ஆழ்ந்து ஆராயத் தொடங்கினேன்.


அத்தியாயம்—117

புறநானூற்று ஆராய்ச்சி

புறநானூற்றை அச்சிடுவதாக நிச்சயம் செய்தவுடனே, பதிப்பு முறையைப் பற்றி யோசிக்கலானேன். வர வரப் புதிய துறைகளிலும் புதிய முறைகளிலும் விஷயங்களைச் சேர்த்து நூல்களைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கிருந்தது. ஆங்கிலம் தெரியாத எனக்கு அப்பாஷையிலுள்ள சிறந்த பதிப்புக்களைப் பார்த்து மகிழவோ. அவற்றைப் போலச் செய்து பார்க்கவோ சக்தியில்லை. சங்கநூலைப் படிக்கவோ, படித்தபின் ஆராய்ச்சி செய்யவோ, அதன் பின் பதிப்பிக்கவோ இறைவன் திருவருள்தான் துணையாக இருந்தது முன் பழக்கம் அவற்றில் இல்லாத நான் எந்த எந்த விதத்தில் ஆராய்ந்தால் அழகாக இருக்குமென்று தோற்றுமோ அவ்வவ்விதத்தில் முயன்று வரலானேன்.

புதிய முறை

கும்பகோணம் காலேஜில் சரித்திர ஆசிரியராக இருந்த கே. ஆர். துரைசாமி ஐயரென்பவர் தம் கையில் பெரிய இங்கிலீஷ் புஸ்தகமொன்றை ஒரு நாள் வைத்திருந்தார்.

“என்ன புத்தகம்?” என்று கேட்டேன்.

“பைபிள்” என்றார்.