பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

736

என் சரித்திரம்

தமிழில் மொழி பெயர்த்தார். அவர் விருப்பப்படி அதனை முற்றும் பார்த்துத் திருத்தம் செய்து கொடுத்ததோடு இடையிடையே சில பாடல்களையும் இயற்றிச் சேர்த்தேன். அந்நாடகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த மொழி பெயர்ப்பைப் பரிசோதித்த காலத்தில் ‘ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களை ஆங்கிலந் தெரிந்த ஒருவர் துணையைக் கொண்டு தமிழில் மொழி பெயர்த்து வெளியிடலாம். காளிதாஸ மகா கவியின் நாடகங்களைத் தமிழில் வசனமாகவும் செய்யுளாகவும் எழுதி வெளியிடலாம்’ என்ற புதிய கருத்து எனக்கு ஏற்பட்டது. மடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சாகுந்தலச் சுலோகங்களிற் சிலவற்றை மொழி பெயர்த்ததுண்டு. ‘பழங் காலத்துத் தமிழ் நூல்களை மாசு கழுவி வெளியிடும் தொண்டில் அல்லவா ஈடுபட்டிருக்கிறோம்?’ என்ற எண்ணத்தால் அத்துறையிலே சென்ற உள்ளத்தை மீட்டுக் கொண்டேன். காலேஜ் ஆசிரியர்கள் பலர். “நீங்கள் புதிதாக வசன நூல்கள் எழுதுங்கள். பாடமாக வைக்கும்படி செய்யலாம். அதனால் உங்களுக்கு நல்ல பொருள் வருவாயுண்டாகும்” என்று அவ்வப்போது சொல்வார்கள் சில சமயங்களில் பொருள் முட்டுப்பாட்டினால் அவர்கள் சொல்லும் யோசனைப் படியே செய்யலாமென்ற சபலம் தோற்றினாலும் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலே ஒன்றிப் போன என் உள்ளத்தில் அந்தச் சிறு விருப்பங்களெல்லாம் நிலை கொள்ளவில்லை.

காவேரியாச்சிக்கு உபகாரம்

அக்காலத்தில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுடைய மனைவியாராகிய காவேரி யாச்சி மாயூரத்தில் இருந்து வந்தார். அவரைக் கவனித்துப் போஷிப்பவர் ஒருவரும் இல்லை. அவர் அடிக்கடி தமக்குப் பொருள் வேண்டுமென்று கடிதம் எழுதுவார். நான் அவ்வப்போது பொருளுதவி செய்து வருவேன். பழந்தமிழ் நூற்பதிப்பிலே ஈடுபட்ட அக்காலங்களில் இடையிடையே பிள்ளையவர்களுடைய நினைவு உண்டாகுவதற்குரிய சந்தர்ப்பங்கள் பல காவேரி யாச்சியின் கடிதங்களும் அந்நினைவுக்கு முக்கிய காரணமாக இருந்தன.

திருப்புகழ்ப் பதிப்பு

திருத்தருப்பூண்டியில் அப்போது ஜில்லா முன்ஸீபாக இருந்தவர் வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளையென்பவர். அவர் முருகக் கடவுளிடத்தில் அளவற்ற பக்தியுடையவர். அக்காலத்தில் அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் அங்கங்கே வழங்கி வந்தது.