பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

என் சரித்திரம்

களை அடக்கி யாள்வதும் பாடம் ஒப்பிக்கக் கேட்பதும் அவன் வேலைகள். அவனிடம் எல்லோரும் அடங்கி நடக்க வேண்டும். சில பிள்ளைகள் அவனுக்கு வேண்டிய தின்பண்டங்களைக் கொடுத்துத் தம் வசப்படுத்தி உபாத்தியாயருடைய பிரியத்தையும் அவன் மூலமாகச் சம்பாதிப்பார்கள். சில சமயங்களில் உபாத்தியாயரது கடுமையைக் காட்டிலும் சட்டாம் பிள்ளையின் கடுமை அதிகமாக இருக்கும்.

மாணாக்கர்களுக்குள் பழையவர்கள் புதியவர்களுக்குக் கற்பிப்பதும் பள்ளிக்கூட வழக்கங்களில் ஒன்று.

பன்னிரண்டு மணிக்குமேல் மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிள்ளைகள் வீட்டுக்குச் செல்வார்கள். பிறகு மூன்று மணிக்கு மீண்டும் பாடம் தொடங்கப்படும். இரவு ஏழு மணி வரையிற்கூடப் பள்ளிக்கூடம் நடைபெறுவதுண்டு.

ஒவ்வொரு நாளும் பாடங்கள் முடிந்தவுடன் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பும்போது அவர்களது ஞாபக சக்தியை விருத்தி செய்விப்பதற்காக அவ்வொருவருக்கும் பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒவ்வொன்றை உபாத்தியாயர் சொல்லி அனுப்புவார். அந்தப் பெயர்களை மறுநாள் மறவாமல் வந்து சொல்ல வேண்டும். ‘மறந்து போய்விடுவோமோ’ என்ற பயத்தால் சில பிள்ளைகள் வீடு சென்றவுடன் தமக்கு உபாத்தியாயர் சொன்ன பொருள்களின் பெயர்களைத் தம் தாய் தகப்பனாரிடம் சொல்லி விடுவார்கள். மறுநாள் விடியற்காலையில் அவர்களிடம் அவற்றைத் கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சொல்வார்கள்.

பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் துணைக்கு யாரையேனும் பிள்ளைகள் அழைத்து வருவார்கள்; பெரும்பாலும் முதிய ஸ்திரீகளை அழைத்து வருவதே வழக்கம். நேரம் கழித்து வந்தால் பிரம்படி பலமாகக் கிடைக்குமே என்ற பயத்தால் ஒவ்வொருவனும் எல்லோருக்கும் முன்பே வந்துவிட முயல்வான். இவ்வாறு வருவதன் பிரயோசனம் பழையதுக்கு உபாத்தியாயர் வீட்டுக்கு விடும்போது தெரியும். வழக்கப்படி பிள்ளைகளைப் பிரம்பினால் அடித்து அனுப்பும்போது, முதலில் வந்தவன் கையில் பிரம்பினால் தடவி விடுவார்; இரண்டாம் பையனை மெல்ல அடிப்பார். வரவர அடி அதிகமாகும்; பலமாகவும் விழும். இதனால், முதல் நாள் பலமான அடி வாங்கினவன் அதற்குப் பயந்து மறுநாள் எல்லோருக்கும் முன்பே வந்து விடுவான். முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள். வேற்றான் என்னும் சொல்லே அவ்வாறு வந்தது. மற்றவர்களை விட வேறான தனிப்-