பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிமேகலை ஆராய்ச்சி

743

புறத்திணையின் உரையில் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுட்கள் பல உதாரணமாகக் காட்டப் பெற்றிருந்தன. பதிப்பிக்கப் பட்டிருந்த பொருளதிகார உரையை வைத்து ஒப்பு நோக்கியபோது அவ்வுரை வேறாகக் காணப்பட்டது. ‘ஏதோ வேறு பழைய உரையாக இருக்க வேண்டும்’ என்று தோற்றியதே தவிர இன்னாருடைய தென்பது விளங்கவில்லை. மற்றும் ஒருமுறை படித்துப் பார்த்தேன்.

புறப்பொருள் சம்பந்தமாக உள்ள எல்லா நூல்களையும் படித்து ஆராயத் தொடங்கி இலக்கண விளக்கத்தைப் படித்தேன். அதில் மாலைநிலை என்னும் துறையைப் பற்றிச் சொல்லுகையில் உரையில், உரையாசிரியர் இன்னவாறு எழுதினாரென்ற குறிப்பு இருந்தது. அக்குறிப்பிலிருந்து என்னிடமிருந்த தொல்காப்பிய உரை, உரையாசிரியரென்று வழங்கும் இளம்பூரணருடையதென்று தெரிய வந்தது. அப்போது நான் மிக்க ஆனந்தத்தை அடைந்தேன். புறப்பொருளிலக்கண ஆராய்ச்சியில் நான் எதிர்பாராமற் பெற்ற பெரிய லாபம் இது. மீண்டும் அவ்வுரையை நன்கு ஆராய்ந்து அதில் வரும் மேற்கோள்களைக் கவனித்து இன்ன நூலென்று குறித்து வந்தேன்.

புறப்பொருள் வெண்பா மாலைப் பதிப்புக்கு வேண்டிய அங்கங்களைச் சித்தம் செய்துகொண்டு சென்னைக்குச் சென்று அதனை அச்சுக்குக் கொடுத்தேன்.


அத்தியாயம்—120

மணிமேகலை ஆராய்ச்சி

திருவாவடுதுறை யாதீன கர்த்தராகிய அம்பலவாண தேசிகர் தமிழ்ப் பயிற்சி மிகுதியாக உடையவர். ஸம்ஸ்கிருதத்தில் அன்பும் சங்கீதப் பழக்கமும் அவர்பால் இருந்தன. கல்லிடைக்குறிச்சி வித்துவான் முத்து சாஸ்திரிகளிடம் அவர் தனியே ஸம்ஸ்கிருதம் பயின்றார். வித்துவான்களுக்குச் சம்மானம் செய்வதில் அவரைப் போஜனென்றும் கர்ணனென்றும் பாராட்டுவார்கள்.

திருவாவடுதுறைப் புத்தகசாலை

ஆதீனத்தின் சார்பில் ஒரு நல்ல புத்தகசாலையை அமைக்க வேண்டுமென்ற விருப்பம் அவருக்கு உண்டாயிற்று. அங்கே இயல்பாகவே ஒரு புத்தகசாலை இருந்தாலும் அதைப் பின்னும்