பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/776

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிமேகலை ஆராய்ச்சி

749

பௌத்தப் பெரியாரொருவர் உள்ளாரென்று முதலியார் தெரிவித்தார். பௌத்த மத நூல்களைப் பற்றியும், அச்சமயக் கொள்கைகளைப் பற்றியும் பல செய்திகளை அப்பெரியாரைக் கேட்டு எழுதச் செய்து எனக்கு அனுப்பினார்.

“இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும்
சிலம்பு.”

என்பதில் வரும் சமனொளி யென்பது சமந்த மென்றும் ஆடம்ஸ்பீக் என்றும் வழங்கப்படுமென்பது அவரால் தெரிந்தது. புத்த தேவருடைய பாதப் படிமைகள் அங்கு உள்ளன என்பதையும் அறிந்தேன்.

உள்ளங் கவர்ந்த பகுதிகள்

ரங்காசாரியரோடு இருந்து மணிமேகலையைப் படித்து இன்புறுவதையன்றி நானும் தனியே படித்துப் படித்து ஈடுபடலாயினேன். இந்த உடம்பை,

“வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது
மூப்புவிளி வுடையது தீப்பிணி யிருக்கை
பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா வுள்ளந் தன்பா லுடையது
மக்கள் யாக்கை”

என்று இழித்துக் கூறிய பகுதியிற் கருத்தூன்றினேன். அன்னதானத்தைச் சிறப்பிக்கும்,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே”

என்ற அடிகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன. தான தருமம் இல்லாமைபற்றிச் சுவர்க்கத்தை ஆபுத்திரனென்பவன் இழிவாகக் கூறுகிறான்:

“அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்
நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்
யாவரு மில்லாத் தேவர்நன் னாட்டுக்
கிறைவ னாகிய வொருபெரு வேந்தே”