பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/778

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்

751

போப் துரையின் நட்பு

பிறகு புறநானூறு வெளியானபின் அதில் ஒரு பிரதி அவருக்கு அனுப்பினேன். அரங்கநாத முதலியார் இல்லாத காலம் அது. சில மாதங்கள் வரையில் போப்பிடமிருந்த கடிதம் வரவில்லை. புத்தகம் அவரிடம் போய்ச் சேர்ந்ததோ, இல்லையோ என்ற சந்தேகத்தோடு நான் இருந்தேன். மே மாதம் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டது அது.

இந்தியன் இன்ஸ்டிடியூட்
26-4-1895

“.....தங்கள் புறநானூற்றைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்க வேண்டும். தாங்கள் சிறப்பாகப் பதிப்பித்த சீவகசிந்தாமணிப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதை அடிக்கடி உபயோகிப்பதுண்டு. என் நாலடியார்ப் பதிப்பில் முகவுரை 41-ஆம் பக்கத்தில் அதைப் பற்றிக் குறித்திருக்கிறேன். தாங்கள் இன்னும் ஏதேனும் பதிப்பித்திருக்கிறீர்களா? தங்கள் பதிப்பு நூல்களைப் பற்றி ராயல் ஏஷியாடிக் ஸொஸைடிக்கு ஒரு கட்டுரை எழுதியனுப்ப உத்தேசித்திருக்கிறேன். புறநானூற்றை இன்னும் தெளிவு படுத்த முடியாதா? எனக்குத் தமிழ் தெரியுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தாலும் எனக்கு அதில் பல பகுதிகள் விளங்கவில்லை. ஆதலால் இன்னும் தெளிவும் சுலபமுமான நடையில் உரை வேண்டும். பண்டிதரல்லாத என்போலியரிடம் கருணை கொள்ளுங்கள்.

“சிந்தாமணி பெரும்பாலும் சுலபமாகவே இருக்கிறது. அருமையும் பெருமையுமுள்ள தமிழின் பொருட்டுத் தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சித் திறனமைந்த பதிப்பு ஒன்று வேண்டும்...புராணக் கதைகளை விலக்கிவிட்டு முச்சங்க வரலாற்றைத் தக்க ஆதாரங்களைக் கொண்டு எழுத வேண்டும்...புறநானூற்றை எவ்வாறு படித்துப் பயன் படுத்தலாமென்பதையேனும் தெரிவியுங்கள்.”

அவர் முதல் முறையாக எழுதிய இக் கடிதத்தால், அவருக்கிருந்த தமிழன்பை ஒருவாறு அளந்தறிய முடிந்தது. தமிழ் நூல்களை நல்ல முறையில் நல்ல உருவத்தில் பதிப்பிக்க வேண்டுமென்ற கருத்துடைய எனக்கு அவர் எழுதியனவெல்லாம் மிகவும் பொருத்தமாகத் தோற்றின.