பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிமேகலைப் பதிப்பு ஆரம்பம்

753

3-1-1896.

“.....நான் நெடுங்காலம் கடிதம் எழுதாமல் தாமதம் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும். தங்கள் அற்புதமான பதிப்புக்களாகிய புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இரண்டையும் எளிதிற் படித்து இன்புற்று வருகிறேன். அவ்விரண்டும் ஒன்றையொன்று அழகாக விளக்குகின்றன.

பாரி, அவன் மகளிற், கபிலர், கோப்பெரூஞ் சோழன், பிசிராந்தையார். பொத்தியார் முதலியவர்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கர்ணபரம்பரைச் செய்திகள் வேண்டும்; 115 முதல் 120 வரையிலுள்ள பாடல்கள் உள்ளங் கவர்வன..., தங்களுக்கு நாலடியாரின் பிரதி ஒன்று அனுப்பச் சொன்னேன். ஆக்ஸ்போர்டிலிருந்து கிடைத்ததா?...புது வருஷ வாழ்த்துக் கூறுகிறேன்.”

அவர் அனுப்பச் செய்த நாலடியார் எனக்குக் கிடைத்தது. அவர் எவ்வளவு ஊக்கத்தோடும் ஆவலோடும் தமிழ் நூல்களை ஆழ்ந்து படிப்பவரென்பதை இக்கடிதத்திலிருந்து உணர்ந்து கொண்டேன். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும், தெரிந்ததைப் பிறருக்கு விளங்கும்படி வெளியிட வேண்டுமென்ற அவர் கொள்கை எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது.

பாரிஸ் நகரத்தில் இருந்த ஜூலியன் வின்ஸோனது தமிழன்பையும் ஆக்ஸ்போர்டிலிருந்த போப்பினுடைய தமிழன்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறப்புடையதாக இருந்தது. இருவரிடத்தும் விடா முயற்சியும் மேற்கொண்ட காரியத்தில் ஆழ்ந்த அன்பும் இருந்தன. நம் நாட்டினரிடத்தில் இக்குணங்கள் இல்லாமையால் சோம்பலுக்காளாகி வாழ்நாளை வீணே கழிக்கின்றனரென்றெண்ணி வருந்தினேன்.

போப் துரை மேலும் பல கடிதங்கள் எழுதினார். புறநானூற்றிலிருந்தும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்தும் பல அரிய செய்யுட்களைத் தெரிந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ஒவ்வொரு வருஷ ஆரம்பத்திலும் அத்தகைய மொழி பெயர்ப்பொன்றை வாழ்த்துடன் எனக்கு அனுப்பி வந்தார்.

இத்தகைய உண்மை உழைப்பாளிகளுடைய நட்பினால் தமிழ்ப் பணியில் என் மனம் ஊற்றமடையலாயிற்று. மணிமேகலை ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.

என்.–48