பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/788

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பெற்ற பட்டம்

761

“கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதரான உத்தமதானபுரம் சாமிநாதையரவர்கள் தனது கால முழுவதும் சங்கத்து நூல்களின் ஆராய்ச்சியினையே செய்து அதி புராதன அரிய பௌத்த சமய பிரபல கிரந்தங்களான சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலையாதி யச்சிட்டுத் தமிழ் நாடு முழுவதும் பரவச் செய்து அவர் படைத்த கீர்த்தி எத்தகையராலும் கொண்டாடத் தக்கதேயாம். ஐயரவர்கள் காலமெல்லாம் பௌத்த சமய நூல்களின் கையெழுத்துப் பிரதிகளைத் தேச தேசமாய், நாடு நாடாய், ஊரூராய், கிராமங் கிராமமாய், வீதி வீதியாய், வீடு வீடாய்ச் சென்று சம்பாதிப்பதிலும், அகப்பட்ட நூல்களைப் பரிசோதிப்பதிலும் அவற்றிற்கு அரும்பதவுரை எழுதுவதிலும், அவற்றிலுள்ள பௌத்த சமய ஆசாரியர்களின் சரித்திரங்களைத் தெரிந்து கொள்வதிலும் அவர்கள் மரபறிவதிலும் அவரெடுத்துக் கொண்ட முயற்சியும், கழிந்த காலமும், அடைந்த வருத்தமும் அளவு படுவனவல்ல. பௌத்த சமய ஆராய்ச்சியிலேயே எந்நாளும் அவர் மனம் நாடிக் கொண்டிருக்கும். அவர் இருக்கும் போதும் நடக்கும் போதும் சந்தியாவந்தனம் புரியும் போதும் சிவ பூஜை செய்யும் போதும் தூங்கும் போதும் பௌத்த சமய சிந்தனையே யன்றி வேறு கிடையாது. இங்ஙன மிலையேல் இத்தகைய அரிய கிரந்தங்களை வெளிப்படுத்தல் முடியாது. இவ்வுண்மை அவரச்சிட்ட நூல்களின் முகவுரைகளிற் காணலாம். புத்தர் பிராமணர் கொள்கைக்கு விரோதஞ் செய்தாரில்லை யெனப்பல ஐரோப்பியர்களின் அபிப்பிராயங்களை எடுத்தெழுதியிருக்கிறார். புத்தர் ஈசன் உண்டென்றாவது ஆன்மாக்கள் உண்டென்றாவது விளங்கக் கூறாமையினாலேயே திருஞானசம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் முதலியோர் மறுத்துரைத் தாரேயன்றி வேறு காரணமில்லையென்று காட்டியிருக்கின்றார்.

பௌத்த நூலின் கடைப் பக்கத்திலே சில தேவாரங்களையும் அச்சிட்டனர். ஜன்மாந்தர புண்யத்தினாலேயே இவ்வாராய்ச்சி ஐயரவர்கட்குச் சித்தித்திருக்கும் போலும். என்னை! உயிர் உடம்பினீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எந்நூல்களுக்கும் ஒத்த துணிபாகலின், இவ்வுண்மை, ‘மன்னுயிர் தாங்குங் கருத்தொடு ஆவயிற்றுதித்தனன்’ என்று கூறிய மணிமேகலை பாத்திர மரபு கூறிய காதையினும் 358-ஆம் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய விசேட வுரையானும் காணலாம். பௌத்த சமய நூல்கள் ஆராய்ச்சி செய்பவர் இவரைக் காட்டிலும் வேறு இக்காலத்தில் அகப்படுவது அருமை. ஆதலின் பல தேயங்களிலுமுள்ள பௌத்த சமயர்கள் இவர்பால் நன்றி பாராட்டித் தங்கள் சமயத்துக்கேற்ற