பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

என் தமிழ்ப்பணி

நம்பி, தாய் வெறியாட முனைவது கண்டு அப்பெண், ஒரு பால் தனக்குள்ளே நகைத்துக் கொண்டாள்; முருகன், பகைவரைத்தான் வருத்துவன் அவன் அன்பரையும் அவன் வருத்துவனோ? நான் அவன் அடிமை: அவ்வாறாகவும் அவன் என்னையும் வருத்துவான்-எனக் கருதுவது என்ன அறியாமை என அவர்களை எள்ளி நகைத்தாள், அந்நகை அவள் உள்ளம் உணர்த்திய ஓர் ஐயத்தினை உணர்ந்ததும் அழிந்து மறைந்தது; தன்னைப்பற்றி வருத்தும் நோய் முருகனால் வந்ததன்று; அதனால், அது வெறியாடுவதால் நீங்காது.

இது உறுதி, அவ்வாறாயின் தாய் வெறியாட்டு விழா நிகழ்த்த, அது நிகழ்த்திய பின்னரும் தன் நோய் நீங்காமையைக் காணின் அவளும் இவ்வூர்க்கிழங்களும் என் ஒழுக்கத்திற்கு இழுக்கம் கற்பித்துப் பழிப்பர்; பழியேதும் நேர்ந்து விடா வண்ணம் என்னைத் தாம் விரும்பும் ஒருவனைப் பிடித்து வந்து மணம் செய்து கொடுக்கத் துணிவர்.

அந்நிலை உண்டான பின்னர் நான் எவ்வாறு உயிர் வாழ்தல் இயலும் என்ற எண்ணம் எழவே அவள் துயர்க்கடலில் ஆழ்ந்து போனாள்.

மகளின் துயர் மேன்மேலும் பெருகக் கண்ட தாய் வெறியாட்டினை விரைந்து முடிக்க விரும்பினாள்: அன்றே அதை முடித்துவிடக் கருதினாள்; வேலனை அழைத்தாள்: வெறியாடும் இடத்தை அழகுற ஆக்கினாள்; இடையே வேலை நாட்டி, அதற்கு மாலை சூட்டினாள்.

வேலன் வாய் திறந்து உரத்த குரல் எடுத்து, முருகன் புகழைப் பாடிப் பரவினான். ஆட்டுக் குட்டியை அறுத்துப் பலி கொடுத்தார்கள்: அவ்வாட்டுக் குருதியோடு கலந்த தினைச்சோற்றைக் கூடைகளில் இட்டு வழிபட்டனர் இவ்வாறு இரவின் இடையாமத்தில், வெறியாட்டுவிழா தடைபெற்றுக் கொண்டிருந்தது.