பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

119



விழுந்த கதைகள், யானைப்பூச்சிகள், பின்னோக்கிய ஒட்டம், தமிழன் காலில் விழுந்து விழுந்து எப்படி ஓணானாக மாறி விட்டான் என்பதை விளக்கும் எதிர் பரிணாமம் போன்ற சிறுகதைகளைப் படைத்தேன். இந்த எதிர் பரிணாமச் சிறுகதையை, இந்தியப் பொதுவுடைமை கட்சியும், அகில இந்திய ஜனநாயக மாதர் மன்றமும் மேடைகளில் குறிப்பிட்டதாக அறிகிறேன்.

எழும்பூரில் பகுத்தறிவு சிந்தனையாளர் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெரும்பாலோர் ஏதோ ஒரு வகையில் பிராமண எதிர்ப்பும், பகுத்தறிவும் கொண்டவர்களாய்த் தங்களை நினைத்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் விதிவிலக்கான உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியும், ஒரு கட்டம் வரை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் மனச்சாட்சிக் காவலராகவும் இருந்த நீதிபதி வேணுகோபால் அவர்களும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். என்னையும் பேச அழைத்தார்கள்.

நான், ‘தமிழகத்தில் பெரும்பாலான தமிழன், செல்வி ஜெயலலிதாவின் காலில் விழுகிறான். தாமதமாக விழுந்தால், அம்மாவுக்குக் கோபம் வரும் என்று தொப்பென்று விழுகிறான். இதைக் கேட்கத் தைரியமோ, அல்லது மனமோ இல்லாத உங்களுக்கு, சுயமரியாதை பற்றியோ, அல்லது பகுத்தறிவு பற்றியோ பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது’ என்ற தோரணையில் பேசி விட்டு, கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டேன்.

பல்வேறு இலக்கியக் கூட்டங்களிலும், ஜெயலலிதாவின் இந்தக் காலடி கலாச்சாரத்தை எதிர்த்துத் தொடர்ந்து எழுத்தாலும், பேச்சாலும் போராடிக் கொண்டிருக்கும் ஒரே எழுத்தாளன் நான்தான்.

1993ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் டில்லிக்கு மாற்றப்பட்டேன். எனது அநியாயமான மாற்றத்திற்கு எதிராக நீதிமன்றம் போனேன். ஜி.கே.எம், எஸ்ஆர்பி , தங்கபாலு, டாக்டர் சுப்பிரமணிய சாமி, சந்திரலேகா போன்றவர்கள் என் பக்கம் இருந்த நியாயத்தை, மனவளர்ச்சி குன்றியவராகத் தோன்றும் எங்கள் அமைச்சர் சிங்டியோவிடம் எடுத்துரைத்தனர். வேறு வழியில்லாமல், அவரும் என்னைக் கள விளம்பரத் துறைக்கு, மாநிலத் தலைமை அதிகாரியாக இதே ஆண்டு டிசம்பர் மாதம் பதவியுயர்வு கொடுத்து நியமித்தார்.