பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

என் பார்வையில் கலைஞர்



தமிழ்க் குடிமகன், பிச்சாண்டி ஆகியோர் எனக்கு நண்பர்கள். இவர்கள் வருவது இயல்பு ஆனால், நான் குறிப்பிட்ட அந்த இரண்டு மூத்த அமைச்சர்களும் அழைப்பிதழ் கிடைக்காததை மனதில் வைத்துக் கொண்டு கலைஞரிடமிருந்து அப்போதைக்கு நழுவிப் போகாமல், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தது ஒரு பெருந்தன்மையான செயல். அண்ணா, திமுகவை எப்படி குடும்பப் பாங்கில் வைத்திருந்தாரோ அப்படியே கலைஞரும் வைத்திருப்பதை கண்ணாரக் கண்டேன்.

இந்த விழாவிற்கு மூப்பனார், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் போன்ற தலைவர்கள் வந்திருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. மூப்பனார் அவர்கள் கூட்டத்தோடு அமர்ந்து இசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார். கலைஞர் மேடைக்கு வந்ததை அவர் கவனிக்கவில்லை. கலைஞர் வெளியே புறப்படும்போது யாரோ ஒருவர் மூப்பனார் வந்திருப்பதாக கலைஞரிடம் தெரிவித்தார். உடனே கலைஞர் திரும்பி நடந்து மூப்பனாரை நோக்கி ஓடாத குறையாக நடந்தார். இதற்குள் மூப்பனாரும் சேதி அறிந்து கலைஞரை நோக்கி ஓடி வந்தார்.

இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அன்போடு அளவளாவினார்கள். இந்த நிகழ்ச்சியைத்தான் அனைத்துப் பத்திரிகைகளும் புகைப்பட சாட்சியாக செய்தியாக்கி இருந்தன. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் சமூக, குடும்ப உறவு என்று வரும்போது தலைவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கலைஞரும், மூப்பனாரும் கண்காட்சி போலவே தோன்றினார்கள். மற்ற தலைவர்களுக்கும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இங்கே சொல்லாமல் விடுவதே கட்டுரையின் தகுதிக்கு ஏற்புடையது.