உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எப்படி வளரும் தமிழ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபதாம் நூற்றாண்டில் கவிதை

27


மூவகைக் கவிதைகள்

மேற்கூறிய விடுதலைப் பாடல்களே யன்றி, வேறு பிற பொருள் பற்றிய பாடல்களும் இந்நூற்றாண்டில் வெளிவந்துள்ளன. ஆயினும் விடுதலைப் பாடல்களே, மக்கள் மன்றத்தில் மிகுதியும் இடம் பெற்று விட்டன. காலமும் சூழ்நிலையுமே அந்நிலையை உருவாக்கின எனலாம். அனைத்தையும் ஒன்று கூட்டிக் கருத்துமுறையாற் கவிதைகளை மூன்று வகைப்படுத்தலாம். அவையாவன: பழைமையைப் பின்பற்றுவன, புதுமையை எதிர்நோக்கிச் செல்வன, பஏழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைவன என்பனவாம். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு காணலாம்.

நாவலர்ச.சோமசுந்தர பாரதியார் எழுதிய 'மாரிவாயில்' முனைவர் வ.சுப.மாணிக்கம் எழுதிய 'கொடைவிளக்கு' முதலிய நூல்கள் பழைமையைப் பின்பற்றுவன. இவ்வணியில் செகவீரபாண்டியனார், கா.நமச்சிவாய முதலியார், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை போன்றவர்தம் கவிதைகள் சேரும். பாரதியார், பாரதிதாசன் முதலியவர்களுடைய கவிதைகள் புதுமையை நோக்கிச் செல்வன. திரு. வி.கலியாண சுந்தரனார், சுத்தானந்த பாரதியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இராய.சொக்கலிங்கனார், வி.துரைசாமி முதலானோர் கவிதைகள், இருமைக்கும் பாலமாக அமைவன.

இனி மொழிநடை, யாப்பு முறை இவற்றால் நோக்கினும் அக் கவிதைகள் முத்திறத்தனவாகவே பாகுபடும். அருஞ்சொற்கள் ஆர்ந்து யாப்பமைவு நேர்ந்து மரபு வழியில் நிற்பன; ஒரு திறத்தன. எளிய சொற்களை ஏற்று யாப்பமைவு சிறிது மாறி மரபுஞ் சிறிது பிறழ்ந்து வருவன மறு திறத்தன. கொச்சை மொழி குலவி, யாப்பமைவு காணாது, மரபை மறந்து செல்வன மூன்றாந் திறத்தன.

கவிதை நூல் வகைகள்

இனி, இந் நூற்றாண்டில் தோன்றியுள்ள கவிதைகளை நூல் வகையால் நோக்கின் தனி நிலைச் செய்யுள், தொடர் நிலைச் செய்யுள், நாடகக் காப்பியம், குழந்தை இலக்கியம், இசைப் பாடல்கள் என ஐந்து பிரிவினவாகக் கொள்ளலாம். தனி நிலைச் செய்யுள் என்பது தனித்தனிப் பாடல்களின் தொகுப்பாகும். இத் தொகுப்பு நூல்களே இக் காலத்துப் பல்கி வரக் காண்கின்றோம். தொடர் நிலைச் செய்யுளாகிய காப்பிய நூல்கள், தொகுப்பு நூல்கள் தோன்றும் அளவுக்குத் தோன்றவில்லை. அத் துறை தக்கார்க்கே கைவரப் பெறும் என்பதாற் போலும்.

காப்பியங்கள் விரல்விட்டு எண்ணும் அளவுக்கே, தோன்றியுள்ளன. பாஞ்சாலி சபதம் (பாரதியார்), பாண்டியன் பரிசு, குறிஞ்சித் திட்டு (பாரதிதாசன்), இராவண காவியம் (புலவர் குழந்தை), சான்றாண்மை (அடிகளாசிரியர்), அவனும் அவளும் (வெ. இராமலிங்கம்பிள்ளை), மேகநாதம் (எஸ்.கே.இராம ராசன்), நூல் மறைப்பு     பூங்கொடி, வீரகாவியம் (முடியரசன்) என்றின்