உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌


வரியோ ஏறியபடி இருக்கிறது; கடன்‌ பளுவோ, கழுத்தை நெறிக்கும்‌ அளவுக்கு; சட்டங்களோ, தொழிலாளரின்‌ உரிமைகளைப்‌ பறிக்கும்‌ விதத்தில்‌!செல்வவான்‌களுக்குத்‌ தரப்படும்‌ சலுகைகளோ, அவர்களே வெட்கப்படும்‌ அளவிலும்‌, முறையிலும்‌/ விலைவாசியோ விஷம்போல்‌ ஏறியபடி! நிர்வாகத்தில்‌ ஊழல்களோ, நாற்றமெடுக்கும்‌ அளவுக்கு!

என்றாலும்‌, தம்பி! மீண்டும்‌ மீண்டும்‌ இத்துணை
கேடுபாடுகளைச்‌ செய்திடும்‌ காங்கிரஸ்‌ கட்சிக்குத்‌
தேர்தல்‌ வெற்றி கிடைக்கிறது.

இதைக்‌ காணும்போது மக்களுக்கு, திகைப்பும்‌, குடிஅரசு முறை மீதே ஒருவிதமான அருவருப்பும்‌ ஏற்படத்தானே செய்யும்‌,

என்ன தேர்தல்‌!
என்ன சட்டசபை!
என்ன குடி அரசு!
எந்த அரசு வந்தும்‌ நமது கஷ்டம்‌
போகக்காணோம்‌.

என்று மக்கள்‌ மனம்‌ குமுறிப்‌ பேசுகின்றனர்‌.

பேசுகின்‌றனர்‌, திகைப்படைகின்றனர்‌, திகில்கூடக்‌ கொள்கின்றனர்‌; ஆனால்‌ கேடுபாடு நிறைந்த காங்கிரஸ்‌ ஆட்சியை வீழ்த்தும்‌, உரிமையும்‌ ஆற்றலும்‌, குடிஅரசுக்‌ கோட்பாட்டின்‌ மூலம்‌, தங்களிடம்‌ தரப்பட்டிருக்கிறது, என்‌பதை மட்டும்‌ தெளிவாக உணர மறுக்கின்றனர்‌.

விழிப்புடனிருத்தல்‌, குடிஅரசு வெற்றிபெற மிகமிகத்‌தேவை.

விழிப்புடன்‌ இருக்கும்‌ நிலையில்‌ உள்ள மக்களையே, குடி அரசு முறையையும்‌ தமக்குச்‌ சாதகமாக்கிக்‌ கொள்ளும்‌, பணம்‌ படைத்தோர்‌, மயக்கவும்‌, மிரட்டவும்‌ முடிகிறது என்றால்‌, விழிப்புணர்ச்சியே அற்றுக்‌ கிடக்கும்‌ மக்களிடம்‌, ஆதிக்கக்காரர்கள்‌ என்ன தான்‌ செய்யமாட்டார்கள்‌!