உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் இந்நாட்டு மன்னர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லோரும்‌ இந்நாட்டு மன்னர்‌

5


னாம்‌ வெஞ்சமர்ச்‌ சூரன்‌, தங்களைக்காண வருகிறான்‌—கட்டளைக்குக்‌ காத்திருக்கிறான்‌—அனுமதி அருள்வீரா?”—என்று கேட்டான்‌. மன்னன்‌, “ஈதென்ன விந்தை! இத்துணை வீரச்செயல்‌ புரிந்தோனை, யான்‌ ஏன்‌ இதுவரை காணவில்லை” என்று எண்ணிப்‌ புலவரை நோக்கி, “தளபதிகள்‌ எண்மர்‌, வேற்படையாளர்‌ பதினாறுபேர்‌, மற்றும்‌ கரிப்படைக்‌ காவலன்‌, ஆகியோரைத்‌ தாக்கியவனா—யார்‌ அவன்‌? எங்குள்ளான்‌? கொண்டுவந்து நிறுத்தும்‌ அவனை, நம்‌முன்‌—தாமதமின்‌றி!” என்று முழக்கமிட்டான்‌.

பவனிக்கான இசைமுழக்கம்‌ எழும்பிற்று.
பராக்குக்‌ கூறுவோர்‌ பதின்மர்‌ வந்து நின்றனர்‌.
பந்தல்‌ அமைத்ததுபோன்ற பட்டுப்‌ போர்வையைப்‌ பலர்‌ முறைப்படி ஏந்திவந்தனர்‌.

மன்னன்‌ எதிர்ப்புறம்‌ அந்தப்‌ பந்தற்‌ போர்வை வந்தடைந்ததும்‌, இனிக்‌ காணீர்‌, தளபதியின்‌ பல்‌ உடைத்து வீரனின்‌ விலாவை; நொறுக்கி, கரிப்படையானை வீழ்த்திய; மாவீரனை!—என்று கூறிக்‌, குறி காட்டினான்‌ புலவன்‌, போர்வையை நீக்கினர்‌; கோவேறு கழுதை ஒன்று, நின்றது, மன்னன்‌ எதிரில்‌; மன்னன்‌, இடிஇடியெனச்‌ சிரித்து, “ஏடா! வீராதி வீரா! நீதானோ, புலவர்‌ போற்றிய மாவீரன்‌! எட்டி உதைத்து இத்தனையையும்‌ செய்ததன்றோ, நம்‌ பாடி வீட்டுக்குக்‌ கொட்டிலில்‌ கிடந்திடும் இக்கோவேறு கழுதை! பலே! பலே! எறி ஈட்டிக்கும்‌ கொடுவாளுக்கும்‌ அஞ்சாது போரிடும்‌ என் தளபதிகள்‌ இதனிடம்‌ படாதபாடுபட்டனர்‌; பல் உடைபட்டனர்‌; ஆம்‌! புலவரே! ஆம்‌!”—என்று கூறிக்‌ கூறிச்‌ சிரித்தான்‌ கோமான்‌; அவையினர்‌ அனைவருமே, புலவர்‌ செய்தளித்த நகைச்சுவை நிகழ்ச்சியைக்‌ கண்டுகளித்தனர்‌.

ஆடலும்‌ பாடலும்‌, அருங்கவிச்‌ சுவையும்‌, வீரமும்‌ வெற்றிப்‌ பொருட்களும்‌ பெற்றளிக்க முடியாத பெருஞ்‌சிரிப்பை, கோவேறு கழுதை அளித்திட முடிந்தது.