பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

ஜன்மங்கள். அதில் ஒன்று முடிந்தது, அனகம்மாள் வாழ்க்கையில் ஒரே ஜன்மம்தான். அது முடிவடைந்தது என்று இருப்பது சிறப்பான கதை முடிவுகளின் வரிகளில் ஒன்று. மாற்றலாகிப் போகக்கூடிய ஒரு ரயில்வே உத்யோகஸ்தனின் குழந்தையிடம் ஒரே ஊரில் நிரந்தரமா, தங்கி இருக்க வேண்டிய ஒரு போர்ட்டரின் மனைவி வைத்த பாசத்தால் ஏற்பட்ட உணர்ச்சி அநுபவத்தை சித்தரிக்கும் கதையான அது, அளவறிந்து இயல்பான கதையம்சம் கொண்ட படைப்பு.

‘யோகி’ என்ற இன்னொரு கதை அன்றைக்கு அதிர்ச்சி தரக்கூடிய கதை. நண்பன் மனைவி என்று தெரியாமல் கைவைத்துவிட்ட காமுகனின் அதிர்ச்சி ஒரு அநுபவமாக அவன் யோகியாகி விட்டதும் யதார்த்தம்தான். 'இரண்டு நாடகங்கள்' ‘கலைஞன் கவலை' 'விஷகன்னிகை' ஆகியவைகளும் கச்சிதமான கதைகளாக அமைந்தவையே. ஆனால் 'வேலையும் விவாகமும்' அப்போதைக்கு ஒரு புதுக்கவிதை. நல்ல அமைப்பானதும் கூட. இது வரைநாம் பார்த்த அத்தனை கதைகளினின்றும் முழுக்க மாறுபட்டது. ஆசைவெறி. பாலுணர்வு மனசலனம், சமூக அநீதி. விதவைதுயரம். வயது வித்யாச மணம், வரதட்சிணை கொடுமை, காதல் உணர்வு, கலைஞன் அவதி, பழக்க வழக்க வித்யாசம். ஆகிய விஷயங்கள்.அந்த கதைகளுக்கு மூலப்பொருள்களாக இருக்கின்றன. இந்த கதைக்கு மூலப்பொருள் கதையில் வரும் கதாபாத்திரம் பாஸ்கரன், 'மலரை வைத்து மாலை கட்டலாம் கோட்டைகட்ட முடியுமா' என்பதுபோல், வாழ்க்கையில் எது எதுக்கு பயன்படும், எந்தஅளவுக்கு பயன்படும், அந்த அளவை நாம் எப்படி அறிவது, அந்த அளவுக்கு உட்பட்டு வாழ்க்கையை எப்படி சீராக நடத்திச் செல்வது என்று எழும் ஒரு பிரச்சனைதான்.

மணந்து கொள்ளவே போவதில்லை என்ற தீவிர சீர்திருத்தவாதி, புதுமைமன மிஸ் குஞ்சிதம் தன்னோடு நெருங்கிப் பழகிய, இஷ்டப்படத்தக்க டாக்டர் பாஸ்கரனிடம் மனதை பறிகொடுக்காதிருந்தவள் டிராமில் கூட்ட நெருக்கத்தில் பெண்மைக்கு அதிர்ச்சிதரும்படியாக நடந்த சம்பவத்தினால் ஏற்பட்ட அநுபவத்தில், மனக் கொதிப்பில் தன் பழய எண்ணங்களை உதறிவிட்டு மிஸஸ் பாஸ்கரனாக ஆனதுதான் கதை. சுதந்திரத்துக்கும் லட்சியத்துக்கும் ஒரு எல்லை உண்டு, அதுக்குள்தான் இயங்க முடியும், இயங்க வேண்டும் என்ற ஒருநியதி உணர்தல் அல்லது உணர்த்தல் இந்தக் கதையின் தொனிப் பொருள் ஆகும்.

301